குரங்கணி நீர்வீழ்ச்சியில் குளித்த வாலிபர் சுழல் குழியில் சிக்கி பலி
போடி:தேனி மாவட்டம் குரங்கணி நீர் வீழ்ச்சியில் குளித்த கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தைச் சேர்ந்த தினகர் 24, சுழல் குழியில் சிக்கி பலியானார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் அருகே இருளப்பபுரத்தை சேர்ந்தவர் புஷ்பரதி 54. இவர் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பி.டி.ஓ.,வாக உள்ளார். இரு நாட்கள் அரசு விடுமுறை என்பதால் புஷ்பரதி , மகன் பி.இ., பட்டதாரியான தினகர் , மகள் வின்சி 20, அலுவலக பணியாளர்கள் 25 பேருடன் தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப் பகுதிக்கு நேற்று காலை சுற்றுலா வந்தனர். உடன் பணிபுரியும் தொழில் நுட்ப உதவியாளர் பால்ராஜ் மகன் கிஷோர், தினகர் ஆகியோர் நரிப்பட்டி கீழ் பகுதியில் உள்ள கொட்டகுடி ஆற்றில் குளிக்க சென்று உள்ளனர். அங்கு மேல்பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சியில் தினகர் குளிக்க சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை. தீயணைப்பு வீரர்கள் தேடிப் பார்த்ததில் நீர்வீழ்ச்சி தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் (சுழல் குழியில்) சிக்கி தினகர் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டனர். குரங்கணி போலீசார் விசாரிக்கின்றனர்.