| ADDED : மார் 14, 2024 04:50 AM
தேனி: விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ உதவித்தொகை வழங்கும் (பி.எம்., கிஷான்) திட்டத்தில் ஆண்டிற்கு ரூ.6ஆயிரம் 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 16 தவணைகளில் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் துவக்கத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டாலும் வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், ஒரு நிலத்திற்கு இருவர் பெயர், கூட்டுப்பட்டா உள்ளிட்ட காரணங்களால் சிலரது பெயர்கள் நீக்கப்பட்டன. தற்போது மாவட்டத்தில் 18,431 பேர் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.இதை தவிர 5ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் விவரங்களை சரிபார்த்தல் (கே.ஒய்.சி.,) எனப்படும் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்காமல் உள்ளனர். இதனால் இவர்களுக்கு பணம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்விவசாயிகள் அஞ்சலகங்கள், ஆதார் மையங்களில் கே.ஒய்.சி., செய்ய வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வேளாண் உதவி அலுவலர்களும் விவசாயிகளின் வசிப்பிடங்களுக்கு சென்று கே.ஒய்.சி., செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இத்திட்டத்தில் புதிதாக பயன்பெற ஒவ்வொரு காலண்டிற்கும் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அதன்படி இந்தாண்டு முதல் காலாண்டில் 394 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனை வேளாண் அலுவலர்கள், வி.ஏ.ஓ.,க்கள் கள ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வேளாண் உதவி இயக்குனர்கள், தாசில்தார், ஆர்.டி.ஓ.,க்கள் கள ஆய்வு செய்ய உள்ளனர்.