உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புள்ளிமான்கோம்பை அருகே போர் வீரரின் பழமையான நினைவுக்கல் 17 ம் நுாற்றாண்டு நினைவு சின்னம் கண்டுபிடிப்பு

புள்ளிமான்கோம்பை அருகே போர் வீரரின் பழமையான நினைவுக்கல் 17 ம் நுாற்றாண்டு நினைவு சின்னம் கண்டுபிடிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பையில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த போர் வீரருக்கு வைக்கப்பட்ட வீரக்கல் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் பேராசிரியர் மாணிக்கராஜ், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பிரகாசம் கண்டறிந்துள்ளனர். வீரக்கல் குறித்து இவர்கள் கூறியதாவது:இன்றைய புள்ளிமான்கோம்பை என்ற ஊரில் சங்க காலத்திற்கு முன்பிருந்து மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை அங்கு காண தொல் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. இவ்வூரின் அருகில் உள்ள புதூர் கிராமத்தில் வைகை ஆற்றின் தென்கரையில் கிபி 17ம் நூற்றாண்டை சேர்ந்த போர் வீரன் ஒருவரின் வீர மரணத்திற்கு பின், அவ் வீரனின் வீரத்தை போற்றி நினைவு கூறும் விதமாக ஒன்றரைஅடி உயரம், ஒரு அடி அகலம் உடைய கல்லில் நினைவுச்சின்னம் கண்டுக்கப்பட்டுள்ளது. இது வீரக்கல் அல்லது நடுகல் என அழைக்கப்படுகிறது. இந்த கல்லில் வீரன் இடது காலை முன் வைத்து வலது காலை பின் வைத்து நிற்கும் ஆலீடாசனம் என்னும் நின்ற கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையில் கேடயம் பிடித்து வலது கையில் பிடித்துள்ள வாளை பெரும் வீரத்தோடு எதிரியை தாக்குவதற்கு முன் செல்வது போன்ற காட்சியை படைப்புச்சிற்பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வீரனுக்கு வலப்பக்கமாக சாய்ந்த கொண்டை அமைப்புடன் காதுகளில் குண்டலங்கள் காதணியாக அணிவிக்கப்பட்டுள்ளது. முகம் சிதைந்து நிலையில் காணப்படும் வீரனின் இடையில் அரை ஆடை கட்டப்பட்டுள்ளது. இந்த வீரக்கல் மூலம் இப்பகுதியில் பெருங்கற்காலம் முதல் மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இம்மக்கள் வீரத்தை போற்றும் மரபை தங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக பின்பற்றி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு இவ்வீரக்கல் சான்றாக உள்ளது, இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை