அங்கன்வாடி மையங்கள் ரூ.54.74 லட்சத்தில் சீரமைத்து மேம்பாடு
தேனி: மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் ரூ.54.74 லட்சத்தில் சீரமைத்து மேம்படுத்தும் பணிகள் துவுங்கி உள்ளது. மேம்படுத்தப்பட்ட முன்பருவ கல்விமுறைக்கு குழந்தைகளை தயார்படுத்துவதற்காக 122 மையங்கள் தேர்வு செய்து பணிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.இம்மாவட்டத்தில் 1065 அங்கன்வாடி மையங்கள் இயங்குகின்றன. இவற்றில் 122 மையங்களை நவீன அங்கன்வாடி மையங்களாக முன்மாதிரி மையங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டன. இதற்காக இம் மையங்களில் உள்ள குழந்தைகளின் தண்ணீர் தேவைக்கான வாட்டர் பில்டர், குழந்தைகளுக்கான டேபிள் சேர், மேஜிக்கல் சிலேட்டுகள், மேலும் டி.வி., அதற்கான வைபை மோடத்துடன் இணைய தளம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அங்கன்வாடி மையத்தில் வீட்டுத் தோட்டங்கள் அமைக்கின்றனர். குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி கற்க தயார் படுத்தும் வகையில் அங்கன்வாடி பயிற்றுனர்கள் சிறப்பு பயிற்சி துவங்கப்பட்டு உள்ளன. இதுதவிர முன்னாள் கலெக்டர் ஷஜீவனா பரிந்துரையில் புனரமைக்க வேண்டிய அங்கன்வாடி மையங்களை கண்டறிந்து, அதில் 102 மையங்களை தலா ரூ.36 ஆயிரம் வீதம் ரூ.36.72 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் துவங்கி உள்ளன. இப் பணியில் அங்கன்வாடி மையங்களில் உள்ள கழிப்பறைகள், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி உட்புறமாக மாற்றி அமைக்க அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் ஊராட்சிகளின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் அங்கன்வாடி மையங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில், 106 மையங்களுக்கு தலா ரூ.17,000 வீதம் ரூ.18.02 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. தனால் அங்கன்வாடி குழந்தைகள் முன்பருவ கல்வி கற்க தயாராவதுடன், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: முன்பருவ கல்வி கற்க அங்கன்வாடி குழந்தைகள் தயாராவது கட்டாயம். அதற்கான பணிகளை துவக்கவும், அங்கன்வாடி மைய கட்டடங்களின் உறுதித் தன்மையை நீடிக்கவும், நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன, என்றார்.