| ADDED : பிப் 12, 2024 05:48 AM
பெரியகுளம்: பெரியகுளம் தெற்கு தெரு ரோடு பல நாட்களாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதால் தூசி பறக்கிறது இதனால் ஆஸ்துமா நோயாளிகள் அவதிக்குள்ளாவது தொடர்கிறது.பெரியகுளம் மூன்றாந்தல் இணைப்பு ரோடு பகுதியில் துவங்கும் தெற்கு தெரு முத்துராஜா தெரு வரை ஒரு கி.மீ., தூரம் உள்ளது. இந்த ரோட்டின் வழியாக மாவட்ட அரசு மருத்துவமனை சென்று திரும்பவும் ஆம்புலன்ஸ் உட்பட பல்வேறு அலுவலகங்களுக்கு செல்வோர், பொது மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த ரோட்டில் தான் பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்து மாதவன் தினமும் அலுவலகம் சென்று திரும்புகிறார்.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இந்த ரோட்டினை தினந்தோறும் பயன்படுத்துகின்றனர். முக்கிய போக்குவரத்து மிகுந்த இந்த ரோடு குண்டும், குழியுமாக தேசமடைந்து உள்ளது. இதனை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் ரூ.10 லட்சத்திற்கு தார் ரோடு அமைக்க டெண்டர் விடப்பட்டு பல மாதங்களாகியும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. தூசியால் அவதி
இந்தப் பகுதியில் ஆஸ்துமா நோயாளிகள் ரோட்டில் பறக்கும் தூசியால் அவதிக்குள்ளாவது தொடர்கிறது. மாணவ, மாணவிகள், ஆஸ்துமா நோயாளிகளை பாதிக்கும் இந்த சேதமடைந்த ரோட்டை சீரமைக்க நகராட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ரோட்டை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.