ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
தேனி: தேனி அருகே ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பற்றி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதே போல் சில தினங்களுக்கு முன் கம்பம் பகுதியில் ஏ.டி.எம்.,மையத்தில் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.தேனி கொடுவிலார்பட்டி தனியார் கல்லுாரி அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. இம்மையத்தில் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடித்துச் செல்ல முயற்சி நடந்துள்ளது. ஆனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு கொள்ளை முயற்சி நடந்தது தெரியவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் பணிபுரியும் எலக்ட்ரீசியன் ராஜேஸ்வரன் பணம் எடுக்க சென்றார். அப்போது இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஏ.டி.எம்., நிறுவன மேலாளர் விருதுநகர் என்.ஜி.ஓ., காலனி மகேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். மகேஷ்குமார் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.