உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாசை தடுக்க வீட்டுக்கு ஒரு மரக்கன்று வளர்க்க விழிப்புணர்வு

 மாசை தடுக்க வீட்டுக்கு ஒரு மரக்கன்று வளர்க்க விழிப்புணர்வு

சுற்றுச்சூழல் மேம்பாடு, ஆரோக்கியம் பெற வீட்டுக்கு ஒரு மரக்கன்று வளர்ப்பது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. மரங்கள் சுற்றுச்சூழலை மேம்படுத்தி காற்றை சுத்திகரிக்கின்றன. பழ மரங்கள் ஆரோக்கியமான உணவை வழங்குவதுடன் வீட்டில் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாகவும் அமைகின்றன. பசுமையான சூழல் மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது. வீட்டில் நெல்லிக்காய், கொய்யா, மாதுளை, வாழை ஆகிய பழ மரங்களும், முருங்கை உள்ளிட்ட காய்கறி மரங்களும் வளர்ப்பதன் மூலம் வீட்டின் தேவையும் பூர்த்தி செய்ய முடியும். கிராமங்களில் இன்னும் மரங்கள் உயிர் வாழ்கின்றன. தொழில், வளர்ச்சி பணி, புதிய குடியிருப்புகள் உருவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் நகரங்களில் எண்ணற்ற மரங்கள் அழிக்கப் படுகின்றன. இருபுறமும் பசுமை கூடாரம் போன்ற மரங்களை வெட்டி ரோடு விரிவாக்கம் செய்வதால் குளுமை மாறி, ரோடுகளில் வெப்பம் அதிகரிக்கின்றது. விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்டும்போது ஒரு மரத்திற்கு பதில் 10 மரங்கன்றுகள் நட வேண்டும் என்ற நடைமுறை இருந்தும் அதை பின்பற்றுவது இல்லை. அதனால் கூடலுாரில் சோலைக்குள் கூடல் அமைப்பினர் 432 வாரங்களாக தொடர்ந்து கண்மாய் கரைப் பகுதி, 18ம் கால்வாய் கரைப்பகுதி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை, முக்கிய ரோடுகள் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். தற்போது வீட்டுக்கு ஒரு மரக்கன்று நட்டு வளர்ப்பதற்கு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்ததி வருகின்றனர். சீனிவாசன், சோலைக்குள் கூடல் அமைப்பு, கூடலுார்: ஒவ்வொரு வீடுகளிலும் மரக்கன்றுகள் நடவு செய்து வளர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தற்போது விரும்புவோரின் வீடுகளுக்கு முன் அவர்கள் விரும்பிய மரங்கன்றுகளோ அல்லது எலுமிச்சை, சுண்டைக்காய், கறிவேப்பிலை, கொய்யா பழம், மஞ்சள், இஞ்சி, பூச்செடிகள், கீரை வகைகள் உள்ளிட்டவைகளை நடவு செய்து அதை பராமரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். வீட்டின் முன் இட வசதி இல்லாதவர்கள் சிறிய பாத்திரங்கள் வைத்து செடிகள் வளர்க்க ஆலோசனையும் வழங்குகிறோம். கடந்த சில மாதங்களாக ஏராளமான வீடுகள் முன் வேம்பு, அரசன், புங்கன் மரங்களை வைத்து பராமரித்து வருகிறோம்., என்றார். செல்வரதி, குடும்பத் தலைவி, கூடலுார் : எனது வீட்டிற்கு முன் பகுதியில் எனது கணவரின் துணையோடு செடிகள் தொடர்ந்து வளர்த்து வருவதால் எப்போதும் குளுமையாகவே இருக்கும். மேலும் நெடுஞ்சாலையில் வெளியேறும் துாசி வீட்டிற்குள் புகாதவாறு முன் பகுதியில் உள்ள செடிகள் தடுக்கின்றன. இதனால் வீட்டில் மாசு ஏற்படுவது குறைந்துள்ளது. ஒவ்வொரு வீடு களிலும் இதே போன்று செடிகள் அதிகம் வளர்த்தால் மாசு முழுமையாக தடுக்கப்படும். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செடிகள் வளர்த்து அதை பராமரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம். வயது முதிர்வு ஏற்பட்டாலும் இதன் ஆர்வம் குறையாததால் சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்க முடிகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்