உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாலை அணிந்து விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்

 மாலை அணிந்து விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்

தேனி: மாவட்டத்தில் கார்த்திகை மாத முதல் நாளான நேற்று மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கினர். தேனி: சபரிமலை மண்டல பூஜைக்காக ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் துளசி மாலை அணிந்து விரதம் துவக்குவது வழக்கம். நேற்று கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு தேனி நகர் பகுதியில் பெத்தாட்சி விநாயகர் கோயில், மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில், என்.ஆர்.டி., சிவகணேச கந்தபெருமாள் கோயில்களில் அதிகாலை 5:00 மணி முதல் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கோவில் குருக்களிடம் மாலை அணிந்து விரதம் துவக்கினர். பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயில் வராகநதி கரையோரங்களிலும், ஸ்ரீ பாலசாஸ்தா கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மஞ்சளாற்று கரையோரம் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். கம்பம்: சுருளி வேலப்பர் சுப்ரமணியசாமி ஐயப்பா சேவா சங்கத்தினர் தங்களது 48 வது ஆண்டு சபரி யாத்திரைக்கான நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். ஏற்கெனவே ஒரு பிரிவினர் மாலை அணிந்தனர். ஆனால் பெரும்பாலானவர்கள் நேற்று அதிகாலையில் சுருளி அருவியில் உள்ள கைலாசநாதர் குகை பகுதியில் ஏராளமான பக்தர்கள் நீராடி, குருநாதர் நாராயணன் பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்து விரதத்தை துவக்கி வைத்தார். முன்னதாக அங்குள்ள பாத விநாயகர் கோயிலில் பூஜை செய்தும், தொடர்ந்து அங்குள்ள ஐயப்பன் கோயிலில் படி பூஜை செய்தும் வழிபட்டனர். ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழாவும் நடந்தது. உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்று கரையிலும் நேற்று காலை திரளான பக்தர்கள் சரண கோஷம் எங்கும் கேட்க மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். ஆண்டிபட்டி: நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். சக்கம்பட்டியில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் நிறுவனர் முத்து வன்னியன் தலைமையில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் பலர் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து, விரதத்தை துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை