இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆண்டிபட்டி ஸ்டேஷன் முன் பா.ஜ.,ஆர்ப்பாட்டம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் மாரத்தான் ஓட்டம் நடத்த அனுமதி கேட்டு வந்த பா.ஜ.,வினரிடம் அடாவடியாக பேசியதாக இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டியில் செப்., 28ல் மாரத்தான் ஓட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆண்டிபட்டி பா.ஜா., வினர் செய்து வருகின்றனர். இதற்கான அனுமதிக்கு ஆண்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் விண்ணப்பித்திருந்தனர். உள் கட்சியை பிரச்சினையை மையப்படுத்தி பா.ஜ.,வைச் சேர்ந்த சிலர் மாரத்தான் ஓட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என போலீஸ் ஸ்டேஷனில் பரமன் என்பவர் மூலம் புகார் மனு கொடுத்திருந்தனர். ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர் சரவணகுமார் இரு தரப்பினரையும் நேற்று முன் தினம் பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தார். தவிர்க்க முடியாத காரணத்தால் பேச்சுவார்த்தைக்கான நேரம் நேற்று காலை மாற்றப்பட்டது. முன்னாள் மண்டல தலைவர் ராஜா தலைமையில் பா.ஜ.,வினர் ஆண்டிபட்டி ஸ்டேஷன் வந்தனர். மாரத்தான் ஓட்டத்திற்கு அனுமதி கேட்ட போது இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இன்ஸ்பெக்டர் அடாவடியாக பேசியதாக கூறி பா.ஜ.,வினர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மாரத்தான் ஓட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்த பின் அங்கிருந்து கலைந்து சென்றனர்.