உயர் அழுத்த மின் கம்பிகளால் பணி முடிந்தும் பயன் இல்லாத பாலம்
ஆண்டிபட்டி: உயர் அழுத்த மின் கம்பிகள் குறுக்கே செல்வதால் புதிய பாலத்தில் பணி முடிந்தும் பயன் இல்லாமல் உள்ளது.ஆண்டிபட்டி ஒன்றியம் கதிர்நரசிங்கபுரம் - அழகாபுரி ரோட்டில் பழையகோட்டையில் நாகலாறு ஓடையின் குறுக்கே சமீபத்தில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூ.1.53 கோடி மதிப்பில் இப்பகுதியில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பணிகள் முடிந்து சில மாதங்களாகியும் பாலத்தை இன்னும் பயன்படுத்த முடியவில்லை. பாலத்தின் மேல் பகுதியில் குறுக்காக உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.இதனால் கனரக வாகனங்கள் பாலத்தை கடந்து செல்ல முடியவில்லை. இக்கிராமத்திற்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் பாலத்தின் வழியாக செல்கின்றன.லாரி, வேன்கள் போன்ற கனரக வாகனங்கள் ஆபத்தைஉணராமல் மேடு பள்ளமான ஓடையில் இறங்கிசெல்கின்றன.பாலத்தின் குறுக்காக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகம் ஆலோசனை தர வேண்டும்.