தேனி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு நின்று செல்லும் பஸ்களால் இடையூறு
ஆண்டிபட்டி : தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ரோட்டில் நின்று செல்லும் பஸ்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவமனை இருப்பதால் எந்நேரமும் இப்பகுதியை கடந்து வாகனங்கள் சென்று வருகிறது. உள்ளூர் வாகனங்களின் பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மதுரையில் இருந்து தேனி, போடி, கம்பம் மற்றும் கேரளா செல்லும் பஸ்களில் வரும் பயணிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் ஏறி இறங்குகின்றனர். இதற்கான பஸ் ஸ்டாப் நிழற்குடை க.விலக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகில் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயணிகளை இறக்கிவிடும் பஸ்களை பெரும்பாலும் மருத்துவமனை மெயின் கேட் முன்பு நிறுத்துகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் ஆட்டோக்கள், ஆம்புலன்ஸ், ரோட்டோர கடைகளால் அதிக நெருக்கடி உள்ளது. இந்நிலையில் பஸ்களும் நின்று செல்வதால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. அவசரத்திற்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை உள்ளது. மருத்துவமனை மெயின் கேட் அருகே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். இப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.