| ADDED : நவ 28, 2025 08:09 AM
தேனி: தேனி சிட்கோவில் அடிப்படை வசதிகள் செய்து தர சிட்கோ, நகராட்சி நிர்வாகம் ஆகியன அழைக்கழிப்பு செய்வதால் சிறு, குறு தொழில் புரிவோர் அவதியடைகின்றனர். தேனி மதுரை ரோட்டில் ரயில்வே கேட் அருகே சிட்கோ அமைந்துள்ளது. அங்கு அரசு நிறுவனமான ஆவின், இரும்பு வேலை ஆலைகள், சிமென்ட் சேமிப்பு குடோன்கள் உள்ளிட்ட பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன ஆனால், அங்கு தெருவிளக்குகள் இல்லை. பல இடங்களில் குப்பை நிறைந்து புதர்மண்டி காணப்படுகிறது. தொடர் திருட்டு இதுபற்றி அங்கு தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள் கூறுகையில், சிட்கோவில் தொழில் நடத்துவதற்கு சிட்கோ நிர்வாகம், தேனி நகராட்சி நிர்வாகத்திற்கு உரிய வரிகளை செலுத்துகிறோம். ஆனால், குப்பை அகற்றுதல், தெருவிளக்குகள் அமைத்தல் மற்றும் பராமரிப்புகள் செய்ய சிட்கோ நிர்வாகத்திடம் கூறினால், நகராட்சியில் தெரிவிக்க கூறுகின்றனர். நகராட்சி நிர்வாகம் சிட்கோ நிர்வாகத்திடம் தெரிவிக்க கூறுகின்றனர். இது துறைகளும் அலைக்கழிப்பு செய்கின்றனர். இதனால் இரவில் பணிபுரிவோர், பணிக்கு வருவோர் பாதிக்கப்படுகின்றனர். அரசு துறைகள் வரிகள் வாங்குகின்றனர். ஆனால், வசதிகள் செய்து தர மறுக்கின்றனர். சில வாரங்களாக சிட்கோவில் திருட்டு சம்பவங்கள் நடக்கிறது.இதனை தடுக்க போலீசார் இரவில் ரோந்து வர வேண்டும் என்றனர்.