திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு அழைப்பு
தேனி: ''கால்நடை வளர்க்கும் விவசாயிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.'' என, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கோயில்ராஜா தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: தேனி கால்நடை மருத்துவமனையில் ஆகஸ்ட் 2வது வாரத்தில் பயிற்சி நடத்தப்படும். இதில் பங்கேற்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி, 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தொடர்ந்து 6 மாதங்கள் பயிற்சி நடக்கும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கையேடு, பண்ணை பார்வையிடல், ஆலோசனை, தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்தாய்வு உள்ளிட்டவை வழங்கப்படும். ஆடு, கோழி, பன்றி, மாட்டுப் பண்ணைகள், சிறிய அளவிலான தீவன உற்பத்தி மையம், தீவனப்புல் உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் வழிமுறைகள், மதிப்பு கூட்டுதல் பொருட்கள் உற்பத்தி செய்தல், ஒருங்கிணைந்த பண்ணையம் உருவாக்குதல், பண்ணை உபகரணங்கள் உற்பத்தி விநியோக பயிற்சிகள் வழங்கப்படும். இதற்கு கட்டணம் கிடையாது. விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களுக்கு சென்று தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என, தெரிவித்தார்.