வழங்கப்படுமா n ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல் கவுன்டர் கருவிகள் n காய்ச்சலில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க உதவும்
கம்பம் 'மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பை துல்லியமாக கண்டறிந்து, மருத்துவக்கல்லுாரி, அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைத்து, பாதிப்பின் அளவை குறைக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 'செல் கவுன்டர்' கருவிகளை வழங்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, கோரிக்கை எழுந்துள்ளது.கடந்த 2019ல் கொரோனா பெருந் தொற்றுக்கு பின் பல வகையான வைரஸ், பாக்டீரியா தாக்குதல்களால் புதுப் புது காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இதில் சிக்குன்குனியா, டெங்கு போன்ற காய்ச்சல்கள் குறிப்பிடத்தக்கவை.தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தேனி மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல், சளி , தொண்டை வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி என பலவகை பிரச்னைகளால் பொது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.நகரங்களில் வசிப்பவர்கள் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் என்ன வகை என்பதை கண்டுபிடிக்க தேவையான உபகரணங்களை வைத்துள்ளனர். ஆனால் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதுமாதிரி வசதிகள் கிடையாது. காய்ச்சலுக்கு மருந்து மாத்திரைகள் மட்டும் தருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பூரணமாக குணமாகாத நிலையில், அரசு மருத்துவமனைகள், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் அங்கேயும் பணிப்பழு அதிகரித்து வருகிறது.எனவே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் 'செல் கவுன்டர்' கருவிகள் வழங்கினால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, தட்டணுக்களின் எண்ணிக்கை, வெள்ளை, சிவப்பு அணுக்கள், என்ன வகையான பாக்டீரியா தாக்குதல் ஏற்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட விபரங்களை கண்டறிந்து, உடனடி சிகிச்சை அளிக்க முடியும். சாதாரண காய்ச்சல் என்றால் தொடர் சிகிச்சை கொடுத்து குணப்படுத்தவும், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் என்றால் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்க ஏதுவாக இருக்கும். எனவே காய்ச்சல் பரவி வரும் இச்சூழலில், 'செல் கவுன்டர்' கருவிகளை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.