ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்களின் 'ஈகோ' பிரச்னையால் வளர்ச்சி திட்டங்கள் அரைகுறையாகவும், நிர்வாகமும் முடங்கியுள்ளது. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இத் தொகுதியில் எம்.எல்.ஏ.,க்களாக தேர்வு ஆன போது ஆண்டிபட்டி வளர்ச்சி திட்டங்களின் அரசன்பட்டியாக விளங்கியது. இந்நிலை மாறி தி.மு.க., தலைவர், எம்.எல்.ஏ., மாவட்ட பொறுப்பு அமைச்சர் இருந்தும் மக்கள் அடிப்படை வசதிகளுக்கு போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். தாலுகா தலைமையிடமும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டிக்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். 2021ல் நடந்த தேர்தலில் 18 வார்டுகளில் தி.மு.க., 9, அ.தி.மு.க., 5, சுயே., 2, இந்திய கம்யூ.,1, மார்க்சிஸ்ட் கம்யூ.,1 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். தலைவராக தி.மு.க., வைச் சேர்ந்த சந்திரகலா, துணை சேர்மனாக தி.மு.க., வைச் சேர்ந்த ஜோதி உள்ளனர். நிர்வாகம் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் தலைவர்,கவுன்சிலர்களுக்கு இடையே சரியான புரிதல் இல்லை. 'ஈகோ' பிரச்சனையால் நிர்வாகம் முடங்கி உள்ளது. இங்கு நிரந்த செயல் அலுவலரும் இருப்பதில்லை. பொறுப்பேற்ற சில மாதங்களில் மாறுதலாகி செல்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 12 செயல் அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர். பேரூராட்சி வார்டுகளில் பொதுமக்களின் குறைகளை கவுன்சிலர்கள் தீர்மானமாக கொண்டு வந்தாலும் செயல் வடிவம் பெற நடவடிக்கை இல்லை. பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் கூறியதாவது: மாவட்ட அதிகாரிகள் அலட்சியம்
வீரகுமார், ஆண்டிபட்டி: மூன்று ஆண்டுகளாக பேரூராட்சி நிர்வாகம் கோமா நிலையில் உள்ளது. மக்கள் பணி ஏதும் நடைபெறவில்லை. நகரின் மையப் பகுதியில் செல்லும் நீர்வரத்து ஓடைகள் கழிவுநீர் குப்பையால் அசுத்தம் அடைந்துள்ளது. சுகாதாரப் பாதிப்பு அதிகமாகிறது. ஓடைகளை தூர்வாரும் நடவடிக்கை இல்லை. பலமுறை புகார் கொடுத்தும் நிதி இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் பிளான் அப்ரூவல், சொத்து வரி, பெயர் மாற்றம் ஆகியவற்றிற்கு மக்கள் அலைக்கழிப்பு செய்யப்படுகின்றனர். தெருக்களில் புதிய வடிகால் வசதி, சிமென்ட் தளம், புதிய தெருவிளக்கு ஏற்படுத்தப்படவில்லை. உரக்கிடங்கு பாதை வழியாகவே சுடுகாடு பாதையும் உள்ளதால் பிணங்களை குடியிருப்புகள் வழியாக கொண்டு செல்கின்றனர். இதற்கு மாற்று ஏற்பாடாக கொண்டுவரப்பட்ட புதிய ரோடு திட்டம் முடங்கி உள்ளது. ஆண்டிபட்டியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மாவட்ட அதிகாரிகளும் அக்கறை கொள்ளவில்லை. தெப்பம்பட்டி ரோட்டில் பேரூராட்சிக்கு சொந்தமான முத்தமிழ் பூங்கா பயன்பாடு இன்றி உள்ளது. இப்பகுதியில் வணிக வளாகம் அல்லது சமுதாயக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புரிதல் இல்லாத பிரதிநிதிகள்
வெற்றிவேலன், ஆண்டிபட்டி: ஆளும் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகத்தில் தலைவர், கவுன்சிலர்கள் இடையே புரிதல் இல்லை. இதனை சரி செய்யும் நடவடிக்கையும் ஆளுங்கட்சியினர் மேற்கொள்ளவில்லை. பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரவும், மின் மயான பணிகள் துவங்கி கிடப்பில் உள்ளது. பேரூராட்சிக்கு தேவையான புதிய திட்டம் கொண்டுவரும் நடவடிக்கை இல்லை. அமைச்சரை சந்தித்து வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதி பெற முயற்சியும் இல்லை. இறைச்சி கடைகள், பிராய்லர் கடைகளால் சுகாதார பாதிப்பு அதிகமாகிறது. கடைகளை வரைமுறைபடுத்தும் நடவடிக்கை இல்லை. யாரிடம் குறைகளை கூறுவது
பாலாஜி, பாப்பம்மாள்புரம்: ஆண்டிபட்டியில் குடிநீர் 10 நாளுக்கு ஒரு முறைதான் கிடைக்கிறது. வாரம் இருமுறை வழங்க நடவடிக்கை இல்லை. வாரச்சந்தையில் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நடவடிக்கை இல்லை. ஆண்டிபட்டி பேரூராட்சி குப்பைக்கிடங்கு குடியிருப்புகளுக்கு அருகில் வந்துவிட்டது. இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சியின் விரிவாக்கப் பகுதிகளில் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். ஒத்துழைப்பில்லாத பேரூராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். தலைவரை தட்டிக்கழிக்கும் கவுன்சிலர்கள்
பொன்சந்திரகலா, பேரூராட்சி தலைவர்: ஆண்டிபட்டி பேரூராட்சியில் ரூ.17 கோடி மதிப்பில் 'அம்ருத்' திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்த பின்பே அடுத்த கட்ட வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி கிடைக்கும். இன்னும் சில மாதங்களில் இப்பணிகள் முடிந்து விடும். 15 வது நிதி குழு மானியம் ரூ.89 லட்சம் மதிப்பில் பேரூராட்சியின் பல இடங்களில் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தில் சேர்மன் சொல்லும் கருத்துக்கள், ஆலோசனைகளை கவுன்சிலர்கள் தட்டிக் கழிக்கின்றனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். பேரூராட்சியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து அமைச்சர் நேரு கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பேரூராட்சிக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். தீர்வு திட்டப்பணிகள் நிறைவேற்ற வேண்டும்.
ஆண்டிபட்டி பேரூராட்சி தற்போது கேள்வி கேட்பார் இன்றி நிர்வாகம் முடங்கி உள்ளது. மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மற்றும் ஆளும் கட்சி நிர்வாகிகள் கொண்ட குழு ஆண்டிபட்டி பேரூராட்சியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பொதுமக்களின் வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துபவர்கள், நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திறமையான செயல் அலுவலரை இங்கு உடனே நியமித்து நிர்வாகத்தை முறைப்படுத்தவும், பேரூராட்சியில் பல ஆண்டுகளாக முடியாத திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும், ஒத்துழைக்காத ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.