உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளம் வடகரை பகுதியில் துாய்மை பணியில் தொய்வு நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்

பெரியகுளம் வடகரை பகுதியில் துாய்மை பணியில் தொய்வு நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்

பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி வடகரை பகுதியில் துாய்மை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் சுகாதார கேடுநிலவுவதாக நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் ரூபினி புகார் தெரிவித்தார். பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் சுமிதா (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. கமிஷனர் தமிஹா சுல்தானா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: பவானி (வி.சி.,): 11 வது வார்டில் சாக்கடை, ரோடு உட்பட எவ்வித அடிப்படை வசதிகள் 4 ஆண்டுகளாக செய்து தரவில்லை. கடந்தாண்டு கீழே விழுந்த வாரி வாய்க்கால் தடுப்பு சுவர் கட்டப் படாததால், சாக்கடையிலிருந்து தெருக்களுக்குள் தினமும் பாம்பு வருகிறது. கூட்டணி கட்சி கவுன்சிலர் வார்டுக்கு தலைவர் அடிப்படை வசதிகள் செய்து தராதது வருத்தம் அளிக்கிறது. நாளைக்கு எப்படி நாங்கள் ஓட்டு கேட்டு செல்வது. தலைவர்: 15 நாட்களில் உங்கள் வார்டுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மணி வெங்கடேசன்: (அ.ம.மு.க.,): தமிழக முதல்வர் ஸ்டாலின், தெருக்களில் ஜாதிப் பெயர்களை நீக்கவும், மறுபெயரிடவும் சட்டசபையில் அறிவித்தார். நகராட்சி நிர்வாகம் இதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறது. வடகரை 20 வது வார்டு ஆங்கிலேயர் பெயரான 'மில்லர் ரோடு' என உள்ளது. இந்தப்பெயரை மாற்றக்கோரி 2011- -2016ல் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தெருவுக்கு, சுதந்திரப்போராட்டத்திற்கு சிறை சென்றவரும், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் 'தியாகி சங்கையா' பெயரிட வேண்டும். இதற்கு கவுன்சிலர்கள் வரவேற்றனர். தலைவர்: வரும் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். லட்சுமி (தி.மு.க.,): 20, 6 வது வார்டு மக்கள் ரேஷன் கடை இல்லாததால் சிரமப்படுகின்றனர். தலைவர்: எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரேஷன் கடைகள் கட்டுவதற்கு அவரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். ரூபினி (தி.மு.க.,): வடகரை பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக வருவதில்லை. விநியோகம் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். தூய்மை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் சுகாதார கேடு அதிகம் உள்ளது. நாய்கள், மாடுகள் தொல்லை அதிகரித்துள்ளது. தலைவர்: பெரியகுளம் பகுதியில் நோய் பாதித்த நாய்கள் மற்றும் நாய்கள், மாடுகளால் இடையூறு உள்ளது. சுகாதார ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிஷோர் பானு,(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): தண்டுப்பாளையம் பள்ளிவாசல் தெரு கிடுகு பின்னும் பகுதியில் உயரழுத்த மின்கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. முத்தையா தெருவில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும். நகராட்சி பகுதியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தில் 21 அரசு உதவி பெறும் பள்ளிகள், 4 நகராட்சி பள்ளிகளுக்கு தன்னார்வலர்கள் 32 பேருக்கு மாதம் தலா ரூ.1,500 வீதம் சம்பளம் வழங்க, நகராட்சி கல்வி நிதியிலிருந்து ஆண்டுக்கு ரூ.5.76 லட்சம் வழங்குவது உட்பட 45 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ