மூன்று ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் சுணக்கம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் ஏதும் நடைபெறாமல் முடங்கி கிடக்கிறது. வார்டுகளின் பல பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறாமல் தவிக்கின்றனர்.ஆண்டிபட்டி பேரூராட்சியில் சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி மற்றும் விரிவாக்க பகுதிகளை கொண்டுள்ளது. 18 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். தினமும் ஆண்டிபட்டி பேரூராட்சியை மையமாக வைத்து வெளியூர்களிலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். வைகை அணை கூட்டு குடிநீர் திட்டம் ஆண்டிபட்டி -- சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் உள்ளது. வாரம் ஒரு முறை வினியோகிக்கப்படும் நீரை மொத்தமாக சேமித்து குடியிருப்புகளில் பயன்படுத்துகின்றனர். பொதுக்கிணறுகள், போர்வெல்கள் மூலம் கிடைக்கும் நீரை மேல்நிலை தொட்டிகளில் ஏற்றி கூடுதல் தேவையை சமாளிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ரோடுகள், வடிகால்கள் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இதனை சீரமைக்கும் நடவடிக்கை இல்லை. தேவையான இடங்களில் புதிய ரோடுகள், வடிகால், தெருவிளக்குகள் அமைக்கும் திட்டங்களும் இல்லை.பொதுமக்கள் கூறியதாவது: வீடுகட்டும் திட்டத்தில் மூன்று ஆண்டுகளாக நிதி வழங்கவில்லை
முனீஸ்வரன், சக்கம்பட்டி: பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளதால் சுகாதாரப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அரசிடமிருந்து திட்டங்களுக்கு தேவையான நிதி பெறவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வடிகால், ரோடுகள் புதுப்பிக்கும் நடவடிக்கை இல்லை. அனைத்து வார்டுகளிலும் உள்ள குறைகளை சரி செய்வதற்கான நடவடிக்கை இல்லை. கடந்த சில ஆண்டுகளில் கிடைத்த நிதியில் குறிப்பிட்ட சில வார்டுகளுக்கு மட்டும் தார் ரோடு, சிமென்ட் ரோடு அமைத்துள்ளனர். வாரச்சந்தை வணிக வளாகம், பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம், ஆண்டிபட்டி மின் மயானம் ஆகியவற்றிற்கு கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது. அவைகளை முழுமைபடுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கை இல்லை. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 2022ம் ஆண்டு பேரூராட்சியில் 43 பேருக்கு தமிழக முதல்வர் மூலம் உத்தரவு நகல் வழங்கப்பட்டு, பணிகள் முடிந்த பலரும் அதற்கான நிதி கிடைக்காமல் தவிக்கின்றனர். இது குறித்த நடவடிக்கையும் இல்லை. ஒரு ஆண்டு கூட தாக்குபிடிக்காத செயல் அலுவலர்கள்
செயல் அலுவலர் வீரகுமார், ஆண்டிபட்டி: பேரூராட்சி நிர்வாகத்தில் தி.மு.க., பதவி ஏற்ற நாள் முதல் ஆண்டிப்பட்டியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஏதும் இல்லை. கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களே பொது மக்களுக்கு கை கொடுக்கின்றன. ரோடு, வடிகால், சிமென்ட் தளம் மேம்பாடு பணிகள் இல்லை. துப்புரவு பணிகள் மெயின் ரோடுகளில் மட்டும் தினமும் நடக்கிறது வார்டுகளில் தினமும் நடைபெறுவது இல்லை. குப்பை அள்ளும் வாகனங்களுக்கு டிரைவர் பணியிடம் இல்லை. துப்புரவு பணியாளர்களே அதனை பராமரிப்பதால் அனைத்து இடங்களுக்கும் செல்வதில்லை. கடந்த 4 ஆண்டில் ஆண்டிபட்டி பேரூராட்சியில் 10க்கும் மேற்பட்ட செயல் அலுவலர்கள் பொறுப்பேற்று பணி மாறுதலாகி சென்றுள்ளனர். நிரந்தரமாக ஒரு ஆண்டு கூட யாரும் இருப்பதில்லை. இதற்கான காரணம் குறித்து விசாரிக்க வேண்டும். தார் ரோடு, சிமென்ட் ரோடு அமைக்க ஒப்புதல்
பொன்சந்திரகலா, பேரூராட்சி தலைவர்: பேரூராட்சியில் ரூ.2.78 கோடி மதிப்பில் தார் ரோடு, சிமென்ட் ரோடு அமைக்க அரசு மூலம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. காமராஜர் நகரில் ரூ.45 லட்சத்தில் சிமென்ட் ரோடு அமைக்கப்பட உள்ளது. பேரூராட்சியில் 'அம்ருத்' குடிநீர் திட்ட பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இந்தப் பணிகள் முழுமை அடைந்த பிறகு மற்ற பணிகளை தொடர முடியும். ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். ஆண்டிபட்டி மின் மயானமும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அப்பகுதியில் ரோடு, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.