மேலும் செய்திகள்
தைப்பூசத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
12-Feb-2025
தேனி, பிப்.12-மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் காலை முதல் கோயிலுக்கு வந்து 'அரோகரா அரோகரா' கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.தைப்பூசத்தை முன்னிட்டு தேனி வேல்முருகன் கோயில், பெத்தாட்சி விநாயகர் கோயிலில், என்.ஆர்.டி., நகர் சிவ கணேச கந்த பெருமாள் கோயில்,மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் உள்ள முருகன் சாமிக்கும், பழனிசெட்டிபட்டி முருகன் கோயில், அல்லிநகரம் பனசலாறு முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், மஞ்சள், பால், தயிர், வாசனைப்பொருட்களில் அபிஷேகங்கள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முருகன் வேடம் அணிந்து கோயிலுக்கு அழைத்து வந்தனர். காலை முதலே பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து 'அரோகரா அரோகரா' கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. பன்னீரில் அபிேஷகம்
ஆண்டிபட்டி: மேற்கு தொடர்ச்சி மலை மாவூற்று வேலப்பருக்கு பால், சந்தனம், பழம், விபூதி, பன்னீர் உட்பட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. ஆண்டிபட்டி பால விநாயகர் கோயில், சக்கம்பட்டி ராஜ விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆண்டிபட்டி ஒன்றியம் எரதிமக்காள்பட்டி சிவ தண்டாயுதபாணி, வாராகி அம்மன் கோயிலில் சத்ரு சம்ஹாரதிரிஷதி யாகம், அபிஷேகம், அலங்காரம் செய்து சுவாமியை வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. பாலாபிேஷகம்
கம்பம்: -ராயப்பன்பட்டி சண்முகநாதன் கோயில் பால் தயிர், நெய், சந்தனம், குங்குமம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் முருகள் எழுந்தருளினார். கம்பம் வேலப்பர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய பால் அண்டாக்கங்களில் நிரப்பப்பட்டு பாலாபிஷேகம் நடைபெற்றது. பெண்கள் பங்கேற்ற பால் குட ஊர்வலம் நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை தரிசிக்க திரளாக பக்தர்கள் குவிந்தனர். நிகழ்ச்சியில் டாக்டர் பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முருகேசன் பங்கேற்றனர். கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், சின்னமனூர் சிவகாமி அம்மன் கோயில்களிலும் தைப்பூச சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. காவடி எடுத்த பக்தர்கள்
கூடலுார்: லோயர்கேம்ப் வழிவிடும் முருகன் கோயிலில் சிறப்பு பால் அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுவாமி முருகனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்தனர். பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்தினர். - கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பொங்கல், பழச்சாறு, அபிஷேகப் பால் பிரசாதமாக வழங்கப்பட்டது. தங்க கவச அலங்காரம்
போடி: சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வள்ளி தெய்வாணையுடன் தங்க கவச அலங்காரத்தில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் தரிசனம் பெற்றனர். போடி தீர்த்தொட்டி ஆறுமுக நாயனார் கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. மூலிகை கலந்த தீர்த்த சுனைகளில் ஏராளமான பக்தர்கள் நீராடி சிறப்பு அலங்காரத்தில் இருந்த முருகனின் தரிசனம் பெற்றனர். ராஜ அலங்காரத்தில் முருகன்
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமியை வழிபட்டனர். இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மனையும் வழிபட்டனர். மூலவர், உற்ஸவர் பாலசுப்பிரமணியர் சமேத வள்ளி, தெய்வானை ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் ஞானாம்பிகை அம்மன் கோயிலில் சிவசுப்பிரமணியர் சமேத வள்ளி, தெய்வானை மற்றும் முத்துக்குமார சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தனர். பெண்கள் வடம்பிடித்து இழுந்த சப்பரம்
மூணாறு: சுப்ரமணியசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா நடந்தது. பழைய மூணாறில் உள்ள பார்வதியம்மன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு முருகனுக்கு அபிஷேகம் நடந்தது. முருகன், வள்ளி, தெய்வானை சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. பஜனை பாடல்கள் பாடப்பட்டன. கோயில் இருந்து உற்ஸவ மூர்த்தி முருகன், வள்ளி, தெய்வானை சமேதமாக சப்பரத்தில் வீதி உலாவுக்கு எழுந்தருளினார். கோயிலில் இருந்து பெண்கள் வடம் இழுக்க அரோகரா கோஷத்துடன் புறப்பட்ட சப்பரம் கோலாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பழைய மூணாறில் பார்வதியம்மன் கோயிலை சென்றடைந்தது. அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அங்கிருந்து புறப்பட்ட சப்பரம் மூணாறு நகரில் வலம் வந்து மாலையில் கோயிலை சென்றடைந்தது. ஏற்பாடுகளை அனைத்து பழநி பாதயாத்திரை குழு தலைவர் சேகர், பொது செயலாளர் கோபி, ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் செய்தனர்.
12-Feb-2025