| ADDED : நவ 26, 2025 03:46 AM
தேனி: வலையபட்டியில் கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கலெக்டர் தலைமையில் மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வலியுறுத்தினர். போடி ஒன்றியம், மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி வலையபட்டியில் உள்ள கல்குவாரி அமைப்பதற்கு பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் கோடாங்கிபட்டி மகாலில் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜகுமார் தலைமை வகித்தார். கனிமவளத்துறை உதவி இயக்குனர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற சிலர் கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு பேசுகையில், 'மாவட்டத்தில் ஏற்கனவே 32 கல்குவாரிகள் இயங்குகிறது. கல்குவாரி உற்பத்தி பொருட்கள் நம் மாவட்டத்திற்கு, நம் மாநிலத்திற்கு பயன்படாமல் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால் விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளது,' என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஒரு நபர் மீது தாக்குவதற்கு ஒரு தரப்பினர் முயற்சித்து வாக்குவாதம், கைகலப்பு, தகராறு ஏற்பட்டது. பழனிசெட்டிபட்டி போலீசார், சமாதானப்படுத்தினர்.பின் கலெக்டர் தலைமையில் மீண்டும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒருதரப்பினர் முன்வைத்தனர். இக்கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த பேசியவர் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.