உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வழியோர கிராமங்களை தவிர்க்கும் ஏத்தக்கோவில் டவுன் பஸ்கள்: ஐந்து கிராம மக்கள் பாதிப்பு

 வழியோர கிராமங்களை தவிர்க்கும் ஏத்தக்கோவில் டவுன் பஸ்கள்: ஐந்து கிராம மக்கள் பாதிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் இருந்து ஏத்தக்கோவில் செல்லும் டவுன் பஸ்கள் வழியோரங்களில் உள்ள கிராமங்கள் வழியாக சென்று திரும்புவதை தவிர்ப்பதால் 5 கிராம மக்கள் பாதிப் படைகின்றனர். ஆண்டிபட்டியில் இருந்து 5 கி.மீ.,தூரத்தில் உள்ள ஏத்தக்கோவில் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ்கள் 20க்கும் மேற்பட்ட முறை சென்று திரும்புகிறது. ஆண்டிபட்டியில் இருந்து செல்லும் டவுன் பஸ்கள் மணியக்காரன்பட்டி, மணியாரம்பட்டி, மறவபட்டி, போடிதாசன்பட்டி, அனுப்பபட்டி வழியாக செல்கிறது. ஏத்தக்கோவிலில் இருந்து மீண்டும் அனுப்பபட்டி, போடிதாசன்பட்டி, மறவபட்டி, மணியாரம்பட்டி, மணியக்காரன்பட்டி வழியாக ஆண்டிபட்டி செல்கிறது. கடந்த ஒரு வாரமாக டவுன் பஸ்கள் வழியோரங்களில் உள்ள கிராமங்கள் வழியாக செல்லாமல் நேர் பாதையில் செல்வதால் 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். அரை கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்கின்றனர். கிராம மக்கள் கூறியதாவது: அனுப்பபட்டி அருகே ரோட்டின் ஓரத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தடுப்புச்சுவர் அமைக்கும் பணியால் போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லை. ஆனால் இதனை காரணமாக வைத்து டவுன் பஸ்களை நேர் வழியில் இயக்குகின்றனர். கடந்த ஒரு வாரமாக பொது மக்களுக்கு பாதிப்பு ஏற் பட்டுள்ளது. இதே ரோட்டில் மற்ற கனகரக வாகனங்கள் சென்று திரும்புகின்றன. டவுன் பஸ்கள் மட்டும் தவிர்க்கின்றனர் என்றனர். ஆண்டிபட்டி ஏத்தக்கோவில் ரோட்டில் வழியோர கிராமங்கள் வழியாக செல்லாத டவுன் பஸ்கள் குறித்த விவரங்களுடன் பொதுமக்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் டவுன் பஸ் நேர கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்