போடி ஒன்றிய அலுவலகத்திற்கு நிதி இழப்பு: கூடுதல் மின் கட்டணத்தால் n கட்டடம் பயன்பாட்டிற்கு வந்தும் வகை மாற்றம் செய்யாத அவலம்
போடி ஒன்றிய அலுவலகம் பயன் படுத்த முடியாத நிலையில் பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இதனால் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானிய திட்டத்தின் கீழ் ரூ.310.18 லட்சம் செலவில் புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் துவங்கியது. இதனால் ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக அருகே உள்ள நகராட்சி அலுவலக கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. ஒன்றிய அலுவலகம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளதால் புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு நகராட்சியில் பிளான் அப்ரூவல் முன்கூட்டியே பெற வேண்டும். கட்டடம் கட்டி முடித்த பின்பு கட்டுமான பணி நிறைவு பெற்றதற்கான சான்று பெற வேண்டும். புதிய கட்டடம் கட்டுமானத்தின் போது மின்வாரியம் மூலம் தற்காலிக மின் இணைப்பு பெறப்படும். கட்டுமானத்திற்கான தற்காலிக மின் கட்டணம் டேரிப் 6 ல் ஒரு யூனிட் ரூ.13. 25 காசு வசூலிக்கப்படும். கட்டுமான பணி முடிந்த பின் இதற்கான சான்று சமர்ப்பித்து சாதாரண மின் கட்டணம் டேரிப் 5க்கு வகை மாற்றம் செய்து ஒரு யூனிட் ரூ.10.15 காசு செலுத்த வேண்டும். வகை மாற்றம் செய்ய கட்டட பணி முடித்த பின் நகராட்சியில் பெறப்பட்ட பிளான் அப்ரூவல், கட்டட முடிவு சான்றினை பெற்று மின்வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் சாதாரண மின் கட்டணமாக வகை மாற்றம் செய்ய முடியும். ஒன்றிய அலுவலக கட்டடம் நகராட்சி பிளான் அப்ரூவல் பெறாமல் கட்டுமான பணி 2021ல் துவங்கி 2023 டிச.12 ல் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். அலுவலகம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் நகராட்சியில் பிளான் அப்ரூவல், கட்டட பணி நிறைவு சான்று பெறவில்லை. இச் சான்றுகளை மின்வாரியத்தில் ஒன்றிய நிர்வாகம் வழங்கததால் வகை மாற்றம் செய்ய முடியவில்லை. இதனால் மின் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.1.45 லட்சத்திற்கு பதிலாக ரூ.2.16 லட்சம் செலுத்தும் நிலையால் இரண்டு ஆண்டுகளாக கூடுதல் நிதி இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க நகராட்சியில் பிளான் அப்ரூவல், பணி நிறைவு சான்று பெற்று மின் கட்டணம் வகை மாற்றம் செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.