உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கர்ப்பிணிகளின் பிரசவ கால மரணங்களை தவிர்க்க காய்ச்சல் பரிசோதனை அவசியம்: சுகாதாரத்துறை

கர்ப்பிணிகளின் பிரசவ கால மரணங்களை தவிர்க்க காய்ச்சல் பரிசோதனை அவசியம்: சுகாதாரத்துறை

கம்பம்: 'கர்ப்பிணிகளின் பிரசவ கால மரணங்களை தவிர்க்க காய்ச்சல் குறித்த விரிவான பரிசோதனை செய்வது அவசியம்,' என, ஆரம்ப சுகாதார நிலையங்களை அறிவுறுத்திய பொது சுகாதாரத்துறை தங்களின் கிராம செவிலியர்களை அலர்ட் செய்து இதில் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.தற்போது தமிழகத்தில் திடீரென அதிக வெப்பம், கனமழை என சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் டெங்கு, டைபாய்டு, நிமோனியா, சிக்குன்குனியா, எலி காய்ச்சல் என பல்வேறு வகையான காய்ச்சல் பரவி வருகிறது.காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பொது சுகாதாரத் துறையால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் காய்ச்சல் பரவும் போது பாதிக்கப்படும் கர்ப்பிணிகளை கூடுதல் கவனத்துடன் கண்காணிக்க சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.கர்ப்ப காலத்தை 3 பிரிவுகளாக பிரித்து முதல் மூன்று, 2 வது மூன்று மாதங்கள், 3வது மூன்று மாதங்கள் என, கவனிக்க வேண்டும். இதில் கடைசி 3 மாதங்கள் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.பிரசவ காலத்தில் தாய், சேய் இறப்பு காரணங்களில் காய்ச்சல் முக்கிய பங்காற்றுவதாக சமீபத்தில் நடந்த சிகிச்சை நடைமுறைகளில் கண்டறியப்பட்டுள்ளன. எனவே கடைசி 3 மாதங்களில் கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல் இருந்தால், சம்பந்தப்பட்ட கர்ப்பிணியிடமிருந்து ரத்தம் சேகரித்து, அந்தந்த மாவட்ட பொது சுகாதாரத் துறையின் ஆய்வகத்திற்கு அனுப்பி, என்ன வகையான பாதிப்பு, என்ன வகையான காய்ச்சல் என கவனிக்க வேண்டும். பின் அதற்கேற்ற வகையில் தாய், சேய் என ஒருங்கிணைந்து சிகிச்சையளிக்க வசதியுள்ள மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. கர்ப்பிணிகளின் பிரசவ கால மரணங்களை தவிர்க்க இந்நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் அத்துறை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ