கறவை பசு வழங்கும் திட்டத்தில் மோசடி: இந்திய கம்யூ., போராட்டம்
மூணாறு: மூணாறு ஊராட்சியில் கறவை பசு வழங்கும் திட்டத்தில் நடந்த மோசடியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.இந்த ஊராட்சியில் பால்வள மேம்பாட்டு துறை சார்பில் கறவை பசு வழங்கும் திட்டத்தில் ஒரு பசு ரூ.65 ஆயிரம் மதிப்பில் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு பயனாளிகளிடம் ரூ.23 ஆயிரம் வசூலிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய ரூ.42 ஆயிரம் பால்வள மேம்பாட்டு துறை ஊராட்சி மூலமும் வழங்கியது.அத்திட்டம் மூலம் தரமற்ற பசுக்கள் வழங்கப்பட்டதால் அவற்றை வாங்க மறுத்த பயனாளிகள் செலுத்திய தொகையை திரும்ப கேட்டதால் பிரச்னை ஏற்பட்டு இறைச்சிக்கு பசுக்களை விற்க நேரிட்டது.திட்டத்தில் நடந்த மோசடி குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என இந்திய கம்யூ., மண்டல செயலாளர் சந்திரபால் கேரள பால்வளத்துறை அமைச்சர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர், பால்வள மேம்பாட்டு துறை உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் புகார் அளித்தார்.போராட்டம்: கறவை பசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு ஊராட்சிக்கு கீழ் செயல்படும் கால்நடை மருத்துவமனை டாக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கால்நடை மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.