சின்னமனுாரில் குப்பை சேகரம் செய்யும் பணியில் சுணக்கம்
சின்னமனுார் : சின்னமனூரில் தினமும் வீடு வீடாக சென்று குப்பை சேகரிப்பதில் சுணக்க நிலை உள்ளது. இதனால் வீதிகளில் குப்பை குவித்து வைக்கப்படுகிறது.சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. நகரில் லட்சுமி நகர், எழில் நகர், அண்ணாமலை நகர், மின் நகர், சிவசக்தி நகர், கண்ணம்மா கார்டன் என விரிவாக்க பகுதிகள் அதிகரித்து வருகிறது. நகராட்சியில் அத்தியாவசிய பணிகளில் சேகரமாகும் குப்பைகளை தினமும் வீடு வீடாக சேகரித்து அதை மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து மேலாண்மை செய்ய வேண்டும். இதற்கென திடக்கழிவ மேலாண்மை திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடுகள் தரப்படுகிறது.சின்னமனுாரை பொறுத்தவரை தினமும் வீடு வீடாக சென்று குப்பை வாங்கும் பணிகள் முடங்கியுள்ளது . குறிப்பாக தெற்கு ரத வீதி , மெயின்பஜாரில் 4 நாட்களுக்கு ஒரு முறை வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தெருவில் குப்பை கொட்டுகின்றனர். காற்றுக்கு குப்பைகள் மெயின் ரோட்டில் பறக்கிறது. மேலும் தெரு நாய்க் கூட்டம் குப்பைகளை கிளறி பறக்க விடுகிறது . இதனால் மெயின் ரோட்டில் வர்த்தகர்கள் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. நகராட்சி துப்புரவு பிரிவின் இந்த சுணக்க நடவடிக்கையால் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர் . குப்பைகளை தினமும் வீடு வீடாக சேகரம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.