குளத்தை குப்பை கிடங்காக மாற்றுவதால் நிலத்தடி நீர் பாதிப்பு சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு தவிப்பு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் குளத்தை குப்பை கிடங்காக மாற்றி வருவதால் நிலத்தடி நீர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த ஊராட்சியில் சண்முகசுந்தரபுரம், ரங்கநாதபுரம், கரிசல்பட்டி, மலையாண்டிநாயக்கன்பட்டி, வேலாயுதபுரம், முத்துச்சங்கிலிபட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. ஊராட்சியில் அதிக மக்கள் தொகை கொண்ட சண்முகசுந்தரபுரத்தில், குடிநீர், தெரு விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பூர்த்தியாகவில்லை. அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்கள் தரும் புகார்களுக்கு நிதிநிலை, ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி ஊராட்சி நிர்வாகம் தட்டிக் கழிப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். ஊராட்சி குப்பையை கிராமத்தை ஒட்டி செல்லும் நாகலாறு ஓடையில் கொட்டி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர். கிராமத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் கூறியதாவது: கூட்டுக்குடிநீர் கிடைக்கவில்லை
அய்யணன், சண்முகசுந்தரபுரம்: கிராமத்திற்கு குன்னூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் உள்ளது. ஆனால் தினமும் குடிநீர் கிடைப்பதில்லை. போர்வெல் நீரே அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தேவைப்படுவோர் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். ஜல்ஜீவன் திட்டத்தில் தனி பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. பல மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. சண்முகசுந்தரபுரத்திலிருந்து ஜம்பலிபுத்தூர், ரங்கசமுத்திரம், வைகை அணை பகுதிகளுக்குச் செல்லும் இணைப்பு ரோடு சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிப்பு ஏற்படுகிறது. புகையிலை பயன்பாடு அதிகம்
மீனாட்சிசுந்தரம், சண்முகசுந்தரபுரம்: கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பயன்பாடு அதிகம் உள்ளது. இதனை தடுக்கும் நடவடிக்கை இல்லை. ஊராட்சியில் துப்புரவு பணியாளர் பற்றாக்குறையை காரணம் கூறி சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. குடியிருப்புகளில் கழிவு நீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர், குப்பை ஆங்காங்கே தேங்கியுள்ளது. மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு இல்லை. அரசு உயர்நிலைப்பள்ளி அருகே ரூ.3.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் தண்ணீர் வசதியின்றி மூடப்பட்டுள்ளது. ஆண், பெண்களுக்கு தனித்தனி நவீன பொதுக்கழிப்பறை வசதி ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். குளத்தை பாதுகாக்க வேண்டும்
ராம்தாஸ், சண்முகசுந்தரபுரம்: கிராமத்தில் தெருவிளக்குகள் போதுமான அளவில் இல்லை. கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். பழுதானவற்றை உடனுக்குடன் மாற்ற வேண்டும். அரசு உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள சிறுகுளத்தில் மழைக்காலத்தில் கிடைக்கும் நீர் சில மாதங்கள் தேங்குவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் சமன் செய்யப்படும். குளத்தை குப்பை கிடங்காக மாற்றி வருவதால் நிலத்தடி நீர் பாதிக்கும் நிலை உள்ளது. குளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக சமுதாயக்கூடம் பராமரிப்பு இல்லை. படிக்கட்டுகள், சன்ஷேடுகள் இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொடர்ந்து வேலை கொடுக்காமல் பயனாளிகளை ஊராட்சி நிர்வாகத்தினர் அலைக்கழிப்பு செய்கின்றனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனம் செலுத்தி பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.