| ADDED : ஜன 18, 2024 06:17 AM
தேனி : கார்,- லாரி விபத்தில் பாதித்து சிகிச்சையில் இருந்த போலீஸ்காரர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவரது உடலுக்கு 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க போலீசார் மரியாதை செய்து தகனம் செய்யப்பட்டது.ஆண்டிபட்டி சேடபட்டி பெருமாள் கோயில் தெரு சுப்புராஜ் மகன் அஜித்குமார் 25. இவர் 2018 ல் காவல்துறை பணியில் சேர்ந்தார். நீலகிரி மாவட்டம் பைகாரா போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்தார். இந்நிலையில் விடுமுறைக்கு கடந்த 2022 மார்ச் 12ல் ஆண்டிபட்டி காரில் வந்த போது , திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி விலக்கு அருகே எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.இதில் காயமடைந்த போலீஸ்காரர் அஜித்குமார், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 'டிஸ்சார்ஜ்' ஆனார்.பின் உடல்நிலை பாதித்து தொடர் சிகிச்சை பெற்றார். ஜன., 16ல் உடல்நலம் பாதித்து இறந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் பிரேத பரிசோதனை செய்து நேற்று தேனி நகராட்சி மின் மயானத்தில் ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ., பாலகங்காதர திலகர், ஆண்டிபட்டி எஸ்.ஐ., காளிதாஸ் போலீசார் தலைமையில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தி உடல் தகனம் செய்யப்பட்டது.