உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு

பாசன கால்வாய்களில் கலக்கும் கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு

சின்னமனூர் : பி.டி.ஆர்., பெரியார் வாய்க்கால்கள் ஆண்டில் இரு மாதங்கள் மட்டும் பாசன வாய்க்காலாகவும் 10 மாதங்கள் சாக்கடை கழிவு நீர், செப்டிக் டேங்க் கழிவுகள், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி விடுகிறது.சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகளில் 40 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. நகராட்சியில் குப்பை அகற்றுதல், சாக்கடை சுத்தம் போன்ற சுகாதார பணிகளில் தேக்கநிலை உள்ளது. இந்நகரில் பாசன வாய்க்கால் குடியிருப்புகள் வழியாக செல்கிறது. இதனால் பொதுமக்கள் இந்த வாய்க்காலை மாசு படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர், செப்டிக் டேங்க் கழிவு நீர், குப்பை கொட்டும் இடமாக வாய்க்கால் மாறி உள்ளது.பாலைவனமாக இருந்த தென்மாவட்டங்கள் முல்லைப்பெரியாறு அணை கட்டியதால் பாசன வசதி பெற்றது. தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது.பெரியார், பி.டி.ஆர்.. வாய்க்கால்கள் மூலம் தப்புக்குண்டு, தாடிச்சேரி, பாலகிருஷ்ணாபுரம், தர்மாபுரி, கோட்டூர், சீலையம்பட்டி, ஜங்கால்பட்டி, கோவிந்த நகரம், அரண்மனைபுதூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 5100 ஏக்கரில் ஒரு போக சாகுபடி நடைபெறகிறது.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போகம் அறுவடை முடியும் தருவாயில் பெரியார், பி.டி.ஆர்., வாய்க்கால்களில் ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்தாண்டு டிசம்பரில் தான் தண்ணீர் திறக்கப்பட்டது. வானம் பார்த்த பூமியாக இருந்த இப்பகுதியில் ஒருபோக சாகுபடி தான் வாழ்வாதாரமாகும்.இப் பாசன வாய்க்கால் உத்தமபாளையம் அருகில் உள்ள ராமசாமிநாயக்கன் பட்டியில் துவங்குகிறது. வாய்க்காலில் வரும் நீரால் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர பயன்படுகிறது. ராமசாமி நாயக்கன்பட்டியில் இருந்து சின்னமனூர் வழியாக செல்கிறது. சின்னமனூரில் கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி அருகே செல்லும் போது சுரங்க பாதை வழியாக செல்கிறது. சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு நகருக்குள் சுரங்க பாதையில் செல்லும் இந்த வாய்க்கால், சக்தி மாரியம்மன் கோயில் அருகில் இருந்து குடியிருப்புகளுக்கு மத்தியில் மீண்டும் திறந்த வெளியில் செல்கிறது. காந்திநகர் காலனி, சாமி குளம் பகுதிகள் இந்த வாய்க்காலின் இரு கரைகளிலும் உள்ளது. இரு பகுதிகளிலும் உள்ளநூற்றுக்கணக்கான வீடுகளின் சாக்கடை கழிவு நீர், செப்டிக் டேங்க் கழிவுகள் பாசன வாய்க்காலில் நேரடியாக விடப்படுகிறது. அது மட்டுமின்றி பாசன வாய்க்காலை குப்பை கிடங்காகவும் பயன்படுத்துகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரியில் மட்டும் முல்லைப் பெரியாறு அணை நீர் பாசனத்திற்கு செல்லும். அப்போது மட்டும் குப்பை, கழிவு நீர் கலப்பதும் தெரியாது. இதற்கு காரணம் இவை வாய்க்கால் நீருடன் கலந்து சென்று விடுகிறது. அதன்பின் 10 மாதங்களும் தண்ணீர் வராது. அந்த காலங்களில் சாக்கடை கழிவு நீர், செப்டிக் டேங்க் கழிவு நீர், குப்பைகள் கொட்டி துர்நாற்றம் வீசும். சின்னமனுார் நகராட்சி நிர்வாகம் சமீபத்தில் வாய்க்காலை தூர் வாரியது. இருந்த போதும் சாக்கடை கழிவு நீர், செப்டிக் டேங்க் கழிவு நீர் கலக்காமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சிமென்ட் சிலாப் அமைக்க வேண்டும்

சரவணன், சமூக ஆர்வலர் சின்னமனூர்: வாய்க்காலை சிமென்ட் சிலாப்களால் மூட வேண்டும் காந்திநகர் காலனி, சாமி குளம் பகுதி குடியிருப்புகளின் கழிவு நீர் வாய்க்காலில் விடப்படுவதால், வாய்க்கால் மாசு படுகிறது. சின்னமனூர் நகருக்குள் ஒரு. கி.மீ. தூரத்திற்கு சுரங்க பாதையில் வரும் வாய்க்கால், மேலும் ஒரு கி.மீ. தூரத்திற்கு குறிப்பாக நகருக்குள் சிமென்ட் சிலாப்புகள் அமைத்து மூடி விட்டால் இந்த பிரச்னை இருக்காது. பொதுப்பணித் துறை அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்னைக்கு தீர்வாக சாக்கடை,செப்டிக் டேங்க் கழிவுகளை வாய்க்காலுக்குள் கலக்காமல் இருக்க நகராட்சி அதற்கானவசதி செய்து தர வேண்டும்.

சாக்கடை வசதி தேவை

ஜெயராம், சமூக ஆர்வலர், சின்னமனூர்: பாசன வாய்க்கால் சாக்கடை வாய்க்காலாக மாறி விட்டது. குடியிருப்போர் என்ன செய்ய முடியும். சாக்கடை வசதி செய்து கொடுக்காததால் தான் வாய்க்காலில் விடுகின்றனர். பாசன வாய்க்கால் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் நகராட்சி நிர்வாகம், அப்பகுதியில் வாய்க்காலின் கரைகளில் குடியிருப்பவர்களுக்கு சாக்கடை வசதி செய்து தர வேண்டும். குப்பைகள் கொட்டாமல் இருக்க தினமும் வீடுகளுக்கு சென்று குப்பை பெற வேண்டும். எனவே அப்பகுதியை வாய்க்கால் சுத்தமாக இருக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நகராட்சியை விட பொதுப்பணித் துறைக்கு தான் பொறுப்பு அதிகம் உள்ளது. பாசன வாய்க்காலை ஒரு கி.மீ. தூரத்திற்கு சிமென்ட் சிலாப்புகள் வைத்து மூடினால் பிரச்னை இருக்காது.

தீர்வு சிமென்ட் சிலாப் அமைக்க வேண்டும்

நகராட்சி அவ்வப்போது வாய்க்காலை தூர் வாரி சுத்தம் செய்கிறது. அது பிரச்னைக்கு தீர்வாகாது. சாக்கடை கழிவுகளை கலக்காமல் இருக்க கரையின் இருபுறமும் கழிவுநீர் வடிகால் வசதி அமைத்திட வேண்டும். அப்பகுதியில் வீடு வீடாக சென்று குப்பைகளை தினமும் சேகரம் செய்ய வேண்டும். திறந்த வெளியில் செல்லும் வாய்க்காலை பொதுப்பணித்துறை சிமென்ட் சிலாப்புகள் அமைத்து மூட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி