| ADDED : மார் 15, 2024 06:38 AM
மூணாறு, : மூணாறு பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவற்றால் உயிர் பலிகள்ஏற்பட்டன. தவிர சேதங்களும் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு வெவ்வேறு பகுதிகளில் பலசரக்கு கடை, குடோன் ஆகியவற்றை சேதப்படுத்தின.மூணாறு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் இடமலைகுடி ஊராட்சியில் சொசைட்டிகுடியில் ரேஷன், பலசரக்கு ஆகிய கடைகள் ஒரே கட்டத்தில் செயல்படுகின்றன. அப்பகுதியில் நேற்று முன்தினம் ஏழு காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் பகல் முழுவதும் விளை நிலங்களில் சுற்றித் திரிந்தன. அவை நள்ளிரவில் ரேஷன், பலசரக்கு கடைகள் அருகில் உள்ள குடோனின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அத்தியாவசிய பொருட்களை சிதறி விட்டு சேதப்படுத்தின.அதே போல் மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான தேவிகுளம் எஸ்டேட் லோயர் டிவிஷனில் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு வந்த ஆறு காட்டு யானைகளை கொண்ட கூட்டம் அங்கு பாலாஜியின் பலசரக்கு கடையின் ஜன்னல் கண்ணாடிகள், கதவு ஆகியவற்றை சேதப்படுத்தி விட்டு இரண்டு மூடை உப்பு, சோப்பு பொடி அடங்கிய பை ஆகியவற்றை தூங்கி சென்றன. தவிர பல்வேறு அத்தியாவசிய பொருட்களையும் சேதப்படுத்தின.