| ADDED : மார் 12, 2024 06:09 AM
கம்பம், : காமயகவுண்டன்பட்டியில் அங்கன்வாடி மைய கட்டட வளாகத்தில் காய்கறி சந்தை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்த மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் கருப்பசாமி கோயில் வீதியில் அமைந்துள்ள அங்கன்வாடி வளாகம், செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. இதனால் இங்கு பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு நிலைமை உள்ளது. சமூக விரோதிகள் இரவில் திறந்த வெளி பாராக மாற்றி விடுகின்றனர். அங்கன்வாடி தவிர அதிக பரப்பளவிலான காலியிடம் புதர்மண்டி உள்ளது. காய்கறி சந்தை அமைக்க கடந்தாண்டு திட்டமிட்டது.அந்த வளாகத்தை சுத்தப்படுத்தி வளர்ந்துள்ள செடி கொடிகள் அகற்றியது. மேலும் அந்த இடத்தில் காய்கறி சந்தை அமைக்கப்படும் என அறிவித்தது. ஆனால் அறிவிப்பு செய்து ஒராண்டை கடந்தும், இதுவரை நடவடிக்கைகளை துவக்கவில்லை. இந்நிலையில் இந்த கட்டட வளாகத்தில் சமூகவிரோத கும்பல் மது அருந்துதல், போதைப் பொருட்கள் பயன்படுத்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். காமயகவுண்டன்பட்டி, அதனை சுற்றியுள்ள கிரமங்களில் காய்கறிகள் சாகுபடி அதிகமாக நடைபெறுகிறது. இங்கு சந்தை அமைத்தால், விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பேரூராட்சி நிர்வாகம் காய்கறி சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.