மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு குடைகள் 'ரெடி'
15-Jul-2025
தேனி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிர்ணயிக்கப்படும் பணிகளை அறைகுறையாக முடிப்பதாலும் பணித்தள பொறுப்பாளர்கள் தனக்கு வேண்டியவர்களுக்கு பணி வழங்குவதால், அதிக பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் மாநில ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரகம் புதிய நடைமுறையை அமல்படுத்தி, தீவிர கண்காணிப்பு செய்து ஊதியம் வழங்கிட வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு நிதியாண்டில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் களப்பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் முறையாக முடிப்பது இல்லை. பணித்தளப் பொறுப்பாளர்கள் தமக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே எளிதான களப்பணிகளை வழங்குவதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் எட்டு மணி நேர பணி, அதில் ஒரு மணி நேரம் ஓய்வு, வேலைக்கான கூலி வாரத்தின் ஒரு நாளிலோ, அல்லது 14 நாட்களுக்கு ஒருமுறையோ வழங்கப்படும். வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பான குடிநீர், குழந்தைகளுக்கு நிழல் தரும் இடம், ஓய்வெடுக்கும் இடம், முதலுதவி வசதி உள்ளிட்டவைகள் இருக்க வேண்டும். தற்போது ஒரு நபருக்கு ரூ.374 ஊதியமாக, வங்கி கணக்குகளில் வரவு வைத்து பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில் பயனாளிகள் நிர்ணயிக்கப்பட்ட பணிகளை அரைகுறையாக முடிப்பது, பணித்தள பொறுப்பாளர்களின் குளறுபடிகளை களைய கூடுதலாக புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு பணியாளர் செய்ய வேண்டிய பணியை மேற்பார்வையாளர் அளவீடுகள் மூலம் அளந்து அதற்கான பணிகள் பணியாளரிடம் தெரிவிக்கப்படும். இதனை பணியாளர் தனக்கான வேலை நேரத்தில் முடிக்க வேண்டும். இதனை பணித்தள பொறுப்பாளர் கண்காணித்து, இருமுறை பதிவு செய்யப்படும் வருகை பதிவேடு விபரங்கள் மூலம் உறுதி செய்த பின்பே ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‛‛மேற்பார்வையாளர் வழங்கிய பணிகளை முடிக்காத பணியாளர்களுக்கு ஊதியம் கிடைக்காது என்பதால் 97 சதவீத பணியாளர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றனர். புதிய உத்தரவால் வளர்ச்சிப் பணிகள் தொய்வின்றி நடக்க வாய்ப்புள்ளது'', என்றனர்.
15-Jul-2025