| ADDED : ஜன 22, 2024 05:49 AM
பெரியகுளம்: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. அவரது பக்தரான ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயருக்கு, ராம நாமம் கோஷத்துடன் நேற்று கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது.பெரியகுளம் கீழ வடகரையில் பாம்பாற்று ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. பக்தர்களுக்கு கேட்டவரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.அயோத்தியில் ராமர் கோயிலுக்கு இன்று (ஜன.22ல்) கும்பாபிஷேகம் நடக்கிறது. அவரது பக்தரான ஆஞ்சநேயருக்கு நேற்று (ஜன.21ல்) கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டது. முன்னதாக மூன்று நாட்களாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. கோபுர கலசத்திற்கு காசி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் உட்பட பல புண்ணிய நதிகளில் எடுத்து வரப்பட்ட புனித நீரை அர்ச்சகர் லட்சுமணன் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டாக்டர் செல்வராஜ், வர்த்தக பிரமுகர்கள் அனுப்குமார், வெங்கடேசன், ரத்தினவேல், கண்ணன், சி.எஸ்.சரவணன், பாலமுருகன், அழகர், ரவி, மோகன், கோபி உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கிருஷ்ணசைதன்யதாஸ் ஹரே ராம நாம கீர்த்தனை பாடினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.