டூவீலர் விபத்தில் மருத்துவ மாணவி பாதிப்பு : சக மாணவர் மீது வழக்கு
தேனி ; தேனியில் நடந்த டூவீலர் விபத்தில் மருத்துவக்கல்லுாரி மாணவிக்கு தலையில் பாதிப்பு ஏற்பட்டது. டூவீலர் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மருத்துவ மாணவர் நிஷாந்த் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கடலுார் மாவட்டம் புவனகிரி தாலுகா பரங்கிபேட்டை மதினாநகர் சங்கர் 54. இவரது மகள் பிரியங்கா 23. இவர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., நான்காமாண்டு படிக்கிறார். இவருடன் திருச்சியை சேர்ந்த நிஷாந்த் 24, படிக்கிறார்.இருவரும் செப்.,22 தேனி என்.ஆர்.டி., நகரில் டூவீலரில் சென்றனர். நிஷாந்த் கவனக்குறைவாக டூவீலரை வேகத்தடையில் ஓட்டியதால் விபத்துக்குள்ளாகி பின்புறம் அமர்ந்திருந்த பிரியங்கா கீழே விழுந்து தலை, உடலில் காயங்கள் ஏற்பட்டன.அருகில் இருந்தவர்கள் அவரை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதன்பின் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிரியங்கா சொந்த ஊருக்கு சென்றார்.இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவி பிரியங்காவிற்கு மீண்டும் தலைவலி ஏற்பட்டு கடலுாரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியின் தந்தை சங்கர் புகாரில் நிஷாந்த் மீது எஸ்.ஐ., சரவணன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.