மெகா பிளாஸ்டிக்கழிவுகள் சேகரிப்பு திட்டம்: ரூ.10 கோடி ஒதுக்கீடு
தேனி: மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் உள்ளாட்சிகள் இணைந்து 'மெகா' பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறையுடன் இணைந்து மெகா பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் ஏற்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்கள் முதல் பொது மக்கள் வரை பிளாஸ்டிக் அகற்றும் பணியில் ஈடுபடவும் உள்ளனர்.உள்ளாட்சி அமைப்புகள், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தயாரிக்கப்பட்ட 'Meendum manjappai' என்ற அலைபேசி செயலி மூலம் நடத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தினமும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனை மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள், உதவிப்பொறியாளர்கள் இதை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டங்களில் மாதந்தோறும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படும். சேகரமான இக்கழிவுகள், மறு சுழற்சிக்கும், சிமென்ட் ஆலைகளுக்கும் எரிபொருளுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் பிளாஸ்டிக் இல்லாத சூழல் உருவாகும். நீர், நிலம், காற்று, கடல் பகுதிகள் பிளாஸ்டிக்கால் மாசடைவது தடுக்கப்படும். மாசு கட்டுப்பாட்டு வாரிய நிதியிருந்து பணிகள் துவங்க உள்ளன. இப்பணியை கலெக்டர்கள், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர்கள் கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது என்றார்.