உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / n மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இறந்தோர், இடம் பெயர்ந்தோர்.... 1.30 லட்சம் பேர்: நகராட்சிகளில் குடியிருப்புகள் கடைகளாக மாறியதால் சிரமம்

n மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இறந்தோர், இடம் பெயர்ந்தோர்.... 1.30 லட்சம் பேர்: நகராட்சிகளில் குடியிருப்புகள் கடைகளாக மாறியதால் சிரமம்

தேனி:மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் பட்டியலில் இறந்தோர், இடம் பெயர்ந்தோர் என இதுவரை 1.30 லட்சம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர். நகராட்சி பகுதிகளில் பல குடியிருப்புகள் வணிக வளாகங்களாக மாறியதால் அங்கு வசதித்தவர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பி.எல்.ஓ.,க்கள் புலம்புகின்றனர். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நவ., 4ல் துவங்கியது. பெயர், முகவரி, புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன. 2002ல் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் அந்த விவரங்கள், இடம் பெறாவிட்டால் அவர்களின் உறவினர்கள் இடம் பெற்றிருந்தால் அவர்கள் விவரங்களை பூர்த்தி செய்து வழங்க அறிவுறுத்தப் பட்டது. பூர்த்தி செய்து பெறப்படும் படிவங்கள் பி.எல்.ஓ.,க்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்து நவீனமயமாக்கும் பணி நடந்து வருகிறது. துவக்கத்தில் இப்பணி செய்வதில் சிரமம் நிலவியது. பின் செயலியில் பதிவேற்றம்(டிஜிட்டலைஸ்) செய்யும் பணி, படிவங்களை வாக்காளர்களிடம் திரும்ப பெறும் பணியில் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் பணிகள் விரைவாகவும் நடந்து வருகிறது. இப்பணி டிச., 11 வரை நீட்டிப்பு செய்துள்ளதால் படிவங்களை பூர்த்தி செய்து வழங்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். படிவங்கள் பதிவேற்றம் மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் 11.30 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். நேற்று வரை இவர்களில் 11.27 லட்சம் பேருக்கு சிறப்பு திருத்த படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 9.67 லட்சம் படிவங்கள் பூர்த்தி செய்து பி.எல்.ஓ.,க்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் ஆண்டிபட்டியில் 31,067, பெரியகுளம் (தனி) 35,328, போடி 25,992, கம்பம் 38,310 என மொத்தம் 1.30 லட்சம் பேர் முகவரியில் வசிக்காதவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் உள்ள 11.30 லட்சம் வாக்காளர்களில் 10.98 லட்சம் வாக்காளர்கள் விபரங்கள் சேகரிக்கப் பட்டுள்ளன. நகராட்சிகளில் சிரமம் மாவட்டத்தில் 6 நகராட்சிகள் உள்ளன. இங்கு வேலை வாய்ப்பிற்காகவும், வெளியூர்களில் இருந்தும் பலர் வசிக்கின்றனர். அவர்களில் சிலர் ஓய்வு பெற்றும்,பணி மாறுதல், சொந்த ஊர்களுக்கு செல்லுதல் ஆகிய காரணங்களால் இடம் பெயர்ந்து செல்கின்றனர். மெயின் ரோடுகளை ஒட்டி முன்பு இருந்த குடியிருப்புகள் தற்போது வணிக நிறுவனங்களாக மாறியதால் அங்கு ஏற்கனவே வசித்த குடியிருபாளர்கள் இடமாறி பலர் சென்றுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் நகராட்சி பகுதிகளில் படிவங்கள் வழங்குவதும், வழங்கிய படிவங்களை திரும்ப பெறுவதிலும் சிரமம் நிலவுகிறது. இதனால் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில் நகராட்சி பகுதிகளில் இப்பணி நிறைவு செய்வதில் சிரமம் நிலவுவதாக பி.எல்.ஓ.,க்கள், அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை