| ADDED : நவ 23, 2025 03:37 AM
கம்பம்: தேனி உப்பார்பட்டி அணை பராமரிப்பு பணிகளுக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கடந்த 3 நாட்களுக்கு முன் தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளதால் கம்பம் பகுதி நெல் நாற்றுகளுக்கு தண்ணீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த அக். 17 ல் பெய்த பெருமழை காரணமாக கம்பம் பள்ளத்தாக்கில் கடும் சேதம் ஏற்பட்டது. பல வாய்க்கால்கள், மடைகள், அணைக்கட்டுகள் உடைத்தன. உப்பார்பட்டி அணைக்கட்டு சேதமடைந்தது. அந்த சேதத்தை சரி செய்யும் பணிகள் கடந்த நவ. 20 ல் துவங்கியது. இந்த பணிகளுக்கென முல்லைப் பெரியாறு அணையிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டது. இன்றுடன் நான்கு நாட்களாகிறது. இதனால் கம்பம், சின்னமனூர் வட்டாரங்களில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக வளர்க்கப்படும் நெல் நாற்றுகளுக்கு தண்ணீரின்றி வாடத் துவங்கி உள்ளது. நாற்றங்காலுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் 4 நாட்களாக தண்ணீர் இன்றி நாற்றுகள் காய்ந்து வருகிறது. எனவே உப்பார்பட்டி அணை பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து, கம்பம் , சின்னமனூர் வட்டாரங்களில் வளர்க்கப்படும் நாற்றுகளை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.