திறப்பு விழா காணாத செவிலியர் குடியிருப்புகள்
போடி: போடி அருகே சிலமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.22.75 லட்சம் மதிப்பில் செவிலியர் குடியிருப்புகள் கட்டப்பட்டு ஓராண்டாகியும் திறப்பு விழா காணாமல் காட்சி பொருளாகவே உள்ளது. போடி ஒன்றியம் சிலமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்குகிறது. சிலமலை, சூலப்புரம், மல்லிங்காபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இரவு நேரங்களில் தங்கி பணி புரியும் செவிலியர்களுக்கு தனியாக குடியிருப்புகள் இன்றி சிரமம் அடைந்தனர். இதனை தவிர்க்க ரூ.22.75 லட்சம் மதிப்பில் புதிதாக செவிலியர் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. ஓராண்டாகியும் திறப்பு விழா காணாததால் பயன்பாடு இன்றி காட்சி பொருளாகவே உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி உள்ள சுற்றுச்சுவர் முழுவதும் சேதம் அடைந்து திறந்த வெளியில் உள்ளதால் இரவு நேரங்களில் செவிலியர்கள் தங்கி பணிபுரிய அச்சம் அடைந்து வருகின்றனர்.கட்டி முடிக்கப்பட்ட செவிலியர் குடியிருப்புகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, சேதம் அடைந்த சுற்றுச் சுவரை சீரமைத்திட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.