புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் பத்து லட்சம் நிபுணர்கள் தேவை காந்திகிராம பல்கலை பேராசிரியர் தகவல்
தேனி: ''நம் நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் 2030க்குள் 10 லட்சம் நிபுணர்கள் தேவை உள்ளது. ஆனால் நம்மிடம் 10 ஆயிரம் பேர் கூட இல்லை'' என தேனியில் நடந்த மின்சிக்கன வார விழாவில் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலை புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் துறை இணைப் பேராசிரியர் கிருபாகரன் பேசினார். அவர் பேசியதாவது: இந்தியாவின் மொத்த மின்உற்பத்தி 4 லட்சத்து 25 ஆயிரம் மெகா வாட் ஆகும். சமீபமாக அதனையும் தாண்டி உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளது. எனினும் நாட்டின் பல பகுதிகளில் 24 மணி நேர மின் வினியோகம் என்பதை துவங்க முடியாத நிலை தொடர்கிறது. நமக்கு மின் உற்பத்தி தேவை மேலும் கூடுதலாக உள்ளது. இதில் மின்சாரத்தை நிலக்கரி, ஆயில், காஸ் மூலம் உற்பத்தி செய்ய இயலும். இதற்கான தேவையால் அதனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மக்கள் ஒவ்வொருவரும் ஒரு யூனிட் மின்சாரம் சேமித்தால் 3 யூனிட் உற்பத்திக்கு சமம். வீட்டில் பயன்படுத்தும் விளக்குகளை எல்.இ.டி.,யாக மாற்றிவிட்டால், மாதத்திற்கு 5 யூனிட் சேமிக்கலாம். நமது நாட்டின்புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் துறையில் 2030க்குள் 10 லட்சம் நிபுணர்கள் தேவை. ஆனால் நம்மிடம் 10 ஆயிரம் பேர் கூட இல்லை. எங்கள் பல்கலையில் சிறப்பான படிப்புகள் உள்ளன. என்றார்.