ரயில்வே பிளாட்பாரம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ரயில்வே பிளாட்பாரம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவும், அங்கு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தினமும் மதுரையில் இருந்து காலையில் ஒரு ரயில் போடி வரையிலும், சென்னையில் இருந்து மூன்று ரயில்கள் இயக்கப்படுகிறது. கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும், கலெக்டர் அலுவலகம் அருகே ரயில்வே ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே டிக்கெட் வழங்கும் அறையுடன் கூடிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியது. பிளாட்பாரம் அமைக்க 6 மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கியது. பணிகள் மெதுவாக நடந்து வருகின்றனர். ரயில் பயணிகள் கூறியதாவது: கலெக்டர் அலுவலகம் முன் நடந்து வரும் ரயில்வே பிளாட்பாரம் பயன்பாட்டிற்கு வந்தால் அரசு அலுவலர்கள், மாணவர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்களும் பயனடைவர்கள். தேனி ரயில்வே ஸ்டேஷனை விட எளிதாக இங்கு வர முடியும். ரயில்வே அதிகாரிகள் இந்த ரயில்வே பிளாட்பாரம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.