உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  அங்கன்வாடி மையம் அருகே ஆபத்தான திறந்தவெளி கிணறு சிலமலை காலனி மக்கள் சுகாதாரக்கேட்டில் தவிப்பு

 அங்கன்வாடி மையம் அருகே ஆபத்தான திறந்தவெளி கிணறு சிலமலை காலனி மக்கள் சுகாதாரக்கேட்டில் தவிப்பு

போடி: போடி அருகே சிலமலை ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு காலனியில் அங்கன்வாடி மையம் அருகே திறந்த வெளி கிணறு மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இப் பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். போடி ஒன்றியம், சிலமலை ஊராட்சியில் கிழக்கு காலனி, புதுக்காலனி, நடுக்காலனி உள்ளது. இப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. சிலமலைக்கு உப்புக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமும், காலனி பகுதிகளுக்கு சூலப்புரம் போர்வெல் நீரும் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர், சாக்கடை வசதி இன்றியும், சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. போதிய தெரு விளக்குகள் இல்லை. ஊராட்சியில் பொது மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என புகார் கூறுகின்றனர். பொதுமக்கள் கூறிய தாவது: தரமற்ற நீரை பருகுவதால் பாதிப்பு சுப்பிரமணி, கிழக்கு காலனி, சிலமலை: சிலமலையில் மேல்நிலைத் தொட்டி இருந்தும் போதிய அளவு தண்ணீர் வினியோகம் இல்லை. இதனால் நீண்ட தூரம் நடந்து, டூவீலரில் சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலை உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக போர்வெல் நீரையே குடிநீராக பருகுவதால் சிறுநீரக கல் அடைப்பால் மக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். தண்ணீரை காய்ச்சி குடித்தாலும் பாத்திரத்தில் உப்பு படிகிறது. பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் ரோடு, தெரு ஓரங்களை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், தரமான குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும். கிணற்றில் தவறி விழும் கால்நடைகள் முருகேசன், கிழக்கு காலனி, சிலமலை: அங்கன்வாடி மையம் அருகே பயன்பாடு இன்றி, திறந்த வெளி கிணறு மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. அதில் குப்பை கொட்டுவதும்,மழைநீர் தேங்குவதால் குழந்தைகள், அருகே வசிக்கும் மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. திறந்த வெளி கிணற்றில் ஆடு, மாடுகள் அடிக்கடி தவறி விழுந்து உயிர் பலியாகி வருகின்றன. தெரு விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கிறது. இதனால் பெண்கள் வெளியே செல்ல அச்சம் அடை கின்றனர். சாக்கடை தூர்வாராததால் அங்கன்வாடி மையம், வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் தேங்கி புழுக்கள் உலா வருகின்றன. விபத்து ஏற்படும் நிலையில் சாக்கடை தரைப் பாலம் சேதம் அடைந்து உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் திறந்த வெளி கிணற்றை மூடவும், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ