மது விற்றவர் கைது
தேனி: தேனி மதுவிலக்கு எஸ்.ஐ., பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு அனுமதி இன்றி மது விற்பனை செய்த பூதிப்புரம் விக்னேஷ்வரன், வீரனிடம் விசாரித்தனர். இதில் வீரனிடமிருந்து கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்யப்படும்15 மதுபாட்டில் உட்பட 23 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விக்னேஷ்வரன் தப்பிச் சென்றார். வீரனை போலீசார் கைது செய்தனர். பெண் தற்கொலை
தேனி: தர்மாபுரி நடுத்தெரு மனோகரன் 27, கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி 24. இவர்களுக்கு 10 மாத பெண்குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரசனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மனோகரன் வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டிலிருந்து பிரியதர்ஷினி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர். டூவீலர் திருட்டு
தேனி: ஆண்டிபட்டி வைகை அணை வைகைப்புதுாரை சேர்ந்தவர் பிரவின்குமார் 34. இவர் தனது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரை, தேனி மதுரை ரோடு பொதுத்துறை வங்கி கிளை முன் கடந்த பிப்., 16ல் நிறுத்தி விட்டு, அந்த வங்கி அமைந்துள்ள மாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். மீண்டும் வந்த போது டூவீலரை காணவில்லை. பாதிக்கப்பட்ட பிரவின்குமார் புகாரில், தேனி எஸ்.ஐ., ஜீவானந்தம் டூவீலரை தேடி வருகிறார். கார் விபத்தில் நால்வர் காயம்
தேனி: பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெரு பொன்ராஜ் 23. தேனி அல்லிநகரம் நகராட்சியின் தற்காலிக டிரைவராக பணிபுரிந்தார். பிப்., 19ல் உப்பார்பட்டி அருகே உள்ள குப்பைக் கிடங்கில் கழிவுகளை கொட்டிவிட்டு, தேனி நோக்கி குப்பை ஏற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். குமுளி திண்டுக்கல் பைபாஸ் ரோடு காளவாசல் அருகே இண்டிகேட்டர் சிக்னல் ஆன் செய்து வலதுபுறமாக திரும்பினார். அப்போது உத்தமபாளையம் அம்பாசமுத்திரம் வடக்குத் தெரு டிரைவர் நாகராஜன் 39, ஓட்டி வந்த கார், குப்பை சேகரிக்கும் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் குப்பை வாகன டிரைவர் பொன்ராஜ், வண்டியில் பயணித்த கோபால், காரில் பயணித்த சுப்பம்மாள், தங்கவேல் ஆகிய நால்வருக்கு காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அல்லிநகரம் போலீஸ் எஸ்.ஐ., சுப்பையன் விபத்து குறித்து விசாரிக்கிறார்.