| ADDED : நவ 27, 2025 06:03 AM
கம்பம்: குண்டும் குழியுமாக உள்ள கம்பமெட்டு ரோடால், ஐயப்ப பக்தர்களின் ஒரு வழிப்பாதைக்கு சிக்கல் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவை இணைக்க போடிமெட்டு, குமுளி, கம்பமெட்டு ரோடுகள் உள்ளன. இரு மாநில எல்லையாக இருப்பதால் மூன்று ரோடுகள் வழியாகவும் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்களில் விவசாயிகள், வர்த்தகர்கள், சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் சென்று வருகின்றனர். இந்த 3 ரோடுகளில் கம்பமெட்டு ரோட்டில் மட்டும் அதிக வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக சபரிமலை மண்டல, மகரவிளக்கு கால உற்ஸவ காலங்களில் கோயிலிற்கு பக்தர்கள் செல்ல ஒரு வழிப்பாதையாகவும் பயன் படுகிறது. தற்போது சபரிமலை மண்டல காலம் துவங்கி அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் செல்கின்றனர். பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரத் துவங்கி உள்ளனர். இதனால் குமுளி மலை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் கம்பமெட்டு ரோட்டில் வாகனங்களை திருப்பி விட ஆலோசித்து வருகின்றனர். ஆனால் கடந்த 2 மாதங்களாகவே கம்பமெட்டு ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ரூ.4 கோடி மதிப்பீடு தயார் செய்து அனுப்பி இருப்பதாகவும், விரைவில் அனுமதி கிடைக்கும் என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கம்பமெட்டு ரோட்டில் பக்தர்களின் வாகனங்களை திருப்பி விட்டால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் ஒருவழிபாதை அமலாவதில் சிக்கல் எழுந்துள்ளது.