| ADDED : பிப் 04, 2024 03:44 AM
கம்பம், கம்பம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுத்தமான நீரில் வளரும் ஏ.டி.எஸ்.,கொசுக்களால் டெங்கு ஏற்படுகிறது. டெங்கு பாதிப்பால் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறைத்து மரணம் ஏற்படும். வீடுகளில் தண்ணீரை மூடாமல் வைப்பதும், நாள்பட்டு தண்ணீரை சேமித்து வைப்பதும் இந்த வகை கொசுக்கள் வளர காரணமாகிறது. சமீப காலமாக கம்பம், சின்னமனூர் வட்டாரங்களில் டெங்கு பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதை சுகாதாரத் துறையும் கண்டு கொள்ளவில்லை.கம்பம் 5 வது வார்டு, நேருஜி தெருவில் ஒருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற மாவட்ட நிர்வாகத்தின் தகவலை தொடர்ந்து, நகராட்சி துப்புரவு பிரிவு அலுவலர்கள், நகர் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் சம்பந்தப்பட்ட நபரின் வீடு மற்றும் வீதி முழுவதும் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோல் சில நாட்களுக்கு முன் ஜெயமங்கலத்திலும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. ஆரம்பத்திலேயே இதனை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நிலைமை மோசமாகும். மாவட்ட சுகாதார துறையின் பூச்சியியல் அலுவலர் கம்பம் நகரில் டெங்கு பாதித்த பகுதியை நேற்று காலை ஆய்வு செய்தார். நகராட்சி துப்புரவு அலுவலர் அரச குமார் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் பிளிச்சீங் பவுடர் போடுவது, வீடுகளில் உள்ள தண்ணீர் வைத்துள்ள பாத்திரங்கள் சரியாக மூடி வைக்கப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.டெங்கு தடுப்பு பணிகளை மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.