உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்துவதில் சிக்கல்: நீர்நிலைகள், ரோட்டோரங்களில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

மாவட்டத்தில் இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்துவதில் சிக்கல்: நீர்நிலைகள், ரோட்டோரங்களில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

கடந்த 30 ஆண்டுகளில் பிராய்லர் கறிக்கோழி பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, பெரிய நகரம் முதல் சிறிய கிராம வரை கடைகள் அமைத்து 24 மணி நேரமும் விற்பனை செய்கின்றனர். பிராய்லர் கோழி கடைகள் அமைக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை. இக் கடைகளில் 20 முதல் 50 கோழிகள் வரை கூண்டில் அடைத்து சுகாதாரமற்ற முறையில் வைக்கின்றனர். கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை அப்புறப்படுத்துவதற்கு வசதியாக நீர்வரத்து கால்வாய்கள், ஓடைகள், பொது இடங்களை தேர்வு செய்து கறிக்கோழி கடைகளை அமைக்கின்றனர். ஓட்டல்கள், சிறு உணவகங்கள், தனியார் விசேஷ நிகழ்ச்சிகளில் கூடுதலான அளவில் பயன்பாடு இருப்பதால் நள்ளிரவு, அதிகாலையிலும் கடைகள் செயல்படுகின்றன.

தினமும் 10 டன் கழிவுகள்

மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கறிக்கோழி கடைகள் செயல்படுகின்றன. தினமும் ஆயிரம் டன் பிராய்லர் விற்பனை ஆகிறது. கடைகள் மூலம் தினமும் 10 டன் கழிவுகள் வெளியாகிறது. இந்த கழிவுகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கண்மாய் கரை, நீர் வரத்து ஓடை, பொது இடங்களில் கொட்டி விடுகின்றனர். உள்ளாட்சி நிர்வாகம் கடைகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர். கழிவுகள் கொட்டிய இடங்களில் உணவுக்காக செல்லும் நாய்கள், பறவைகள் உலா வருவதால் நோய் தொற்றுக்கு வழி ஏற்படுத்துகிறது. தோல் நோயால் பாதித்த தெரு நாய்கள் அனைத்து இடங்களிலும் சுற்றித் திரிகின்றன. இவைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் இல்லை.

கழிவுகளை மக்க செய்ய வேண்டும்

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பிராய்லர் கறிக்கோழி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை பொது இடங்களில் கொட்டிச்செல்பவர்களை கண்டறிந்து உள்ளாட்சி நிர்வாகங்கள் அபராதம் விதிக்க வேண்டும். உள்ளாட்சிகளில் சேகரிக்கப்படும் கோழிக்கறி கழிவுகளை மண்ணில் புதைத்து மக்கச்செய்ய வேண்டும். மக்கும், மக்காத உரங்களை பிரித்து பராமரிக்கும் திடக் கழிவு மேலாண்மையில் கோழி கழிவுகளை கையாள பணியாளர்களை கூடுதலாக ஒதுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும். கறிக்கோழி கடைகளை சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து சுகாதாரத்துடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி