பெரியாறு அணையில் மழை நீர்வரத்து மீண்டும்அதிகரிப்பு
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் பெய்த மழையால் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இந்த அணையில் மே 23ல் துவங்கிய தென்மேற்கு பருவமழையால் 15 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்து ஜூன் 2ல் 130.55 அடியை எட்டியது. அதிகபட்சமாக நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியை தாண்டியது. அதன் பின் மழை குறையத் துவங்கி நேற்று முன்தினம் நீர்வரத்து 377 கன அடியாக இருந்தது. நீர்மட்டம் சற்று குறைந்து 128.65 அடியானது. (மொத்த உயரம் 152 அடி).இந்நிலையில் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்பிடிப்பு பகுதியான பெரியாறில் 34.2 மி.மீ., தேக்கடியில் 24.6 மி.மீ., மழை பதிவானது. இதனால் நீர்வரத்து மீண்டும் சற்று அதிகரித்து 585 கன அடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 1200 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4406 மில்லியன் கன அடியாகும். நேற்று மழை தொடர்ந்தது. இதனால் நீர்வரத்து மேலும் அதிகரித்து நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 108 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.