| ADDED : ஆக 02, 2024 06:52 AM
லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். தமிழக கேரள எல்லையில் இருப்பதால் வாகனப் போக்குவரத்து அதிகம். 2018ல் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. அதன் பின் மலைப்பாதை சற்று அகலப்படுத்தப்பட்டு மண் சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது. இருப்பினும் சில இடங்களில் இப்பணிகள் நடைபெறவில்லை. மாதா கோயில் வளைவு, இரைச்சல் பாலம் வளைவு, பழைய போலீஸ் சோதனை சாவடி ஆகிய இடங்களுக்கு அருகே ரோட்டோர மலைப்பகுதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலையில் உள்ளது. தென்மேற்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதுடன் மூணாறு கேப் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதேபோல் குமுளி மலைப்பாதையிலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக அக்டோபர், நவம்பரில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். அந்த நேரத்தில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். பேரிடர் மீட்பு குழுவினருடன் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு குமுளி மலைப்பாதையில் ஆய்வு நடத்தி வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டியது அவசியமாகும்.ஜெகன், ஹிந்து முன்னணி நகர பொதுச் செயலாளர், கூடலுார்:மலைப்பாதையில் மிகப்பெரிய விபத்து மற்றும் மண்சரிவு ஏற்பட்டால் மட்டுமே அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளின்றனர். முன்கூட்டியே வராமல் தடுப்பதற்காக ஆலோசனை மேற்கொண்டாலும் அதை நடைமுறைப்படுத்துவதில்லை. மலைப்பாதையில் பல இடங்களில் சாய்ந்து விழும் ஆபத்தான மரங்கள் உள்ளன. இதனை அகற்றுவதுடன் மண்சரிவு ஏற்படும் இடங்களில் தடுப்புச் சுவர் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முன் வர வேண்டும்.