உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தலைவருக்கு தெரியாமல் ரோடு பணி துணைத்தலைவர் மகனுடன் மோதல்

தலைவருக்கு தெரியாமல் ரோடு பணி துணைத்தலைவர் மகனுடன் மோதல்

தேவதானப்பட்டி: தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், கெங்குவார்பட்டி பேரூராட்சி தி.மு.க. ,வை சேர்ந்த தலைவர் தமிழ்ச்செல்விக்கு தெரியாமல் ரோடு பணி நடப்பதாக கூறி பிரச்னை ஏற்பட்டதில் துணைத்தலைவர் மகனுடன் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ரோடு மறியலில் ஈடுபட்டனர். கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டது. தலைவராக தமிழ்ச்செல்வி (தி.மு.க.), துணைத்தலைவராக ஞானமணி(தி. மு.க.) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவரின் கணவர் தமிழன் தி.மு.க., செயலாளராகவும், இவரது மகன் ஸ்டீபன் மாவட்ட மாணவரணி அமைப்பாளராகவும் உள்ளனர். டெண்டர் விடுவது, கான்ட்ராக்டர் தேர்வில் தலைவர், துணைத்தலைவர் இடையே முரண்பாடு ஏற்பட்டது. பெரும்பாலான தி.மு.க., கவுன்சிலர்கள் துணைத்தலைவருக்கு சாதகமாக இருந்தனர் . இதனால் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். கட்சி மேலிடம் தலையிட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த பிரச்னையால் 9 மாதங்களாக பேரூராட்சி கூட்டம் நடக்காமல் முடங்கியது. இந்நிலையில் கடந்த வாரம் கெங்குவார்பட்டி பட்டிமந்தை பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் தலைவரின் ஒப்புதலின்றி, துணைத்தலைவர் அனுமதியோடு மூன்று நாட்களுக்கு முன் ரோடு அமைக்கும் பணி துவங்கியது. இதனால் மீண்டும் தலைவர், துணைத்தலைவர் இடையே பிரச்னை ஏற்பட்டது. நேற்று செங்குளத்துபட்டி 13 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராஜவேல், பேரூராட்சிஅலுவலகம் வந்து ரோடு வேலை நடப்பது குறித்து தலைவரிடம் கூறினார். இருவரும் பட்டிமந்தை பகுதிக்கு சென்றனர். அங்கு வந்த ஸ்டீபனுக்கும், ராஜவேலுக்கும் மோதல் ஏற்பட்டது. ஸ்டீபன் அவரது ஆதரவாளர்கள் ராஜவேலுவை தாக்கினர். ஸ்டீபன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி தலைவர், ராஜவேலு சமுதாயத்தினர் கொடைக்கானல் காட்ரோடு பிரிவில் மறியலில் ஈடுபட்டனர்., ராஜவேலு தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்டீபன் தரப்பினர் கெங்குவார்பட்டி கம்பெனிபிரிவு ரோட்டிலும் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., (பொறுப்பு) சீராளன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப்பின் இரண்டு மணி நேரம் நடந்த ரோடு மறியல் கைவிடப்பட்டது. இரு தரப்பும் வெவ்வேறு சமுதாயம் என்பதால் பிரச்னை ஜாதி மோதலாக மாறிவிடக்கூடாது என போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை