திண்டுக்கல்-குமுளி பைபாஸ் ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் ரவுண்டானா
தேனி : திண்டுக்கல் - குமுளி பைபாஸ் ரோட்டில் வீரபாண்டி அருகே அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா வாகனங்கள் செல்ல முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் விபத்து அபாயம் எழுந்துள்ளது.இந்த பைபாஸ் ரோட்டில் 92 கி.மீ., துாரத்திற்கு அமைந்துள்ளது. முத்துத்தேவன்பட்டியில் இருந்து வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் செல்லும் சந்திப்பில் அடிக்கடி விபத்து நடந்ததால் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இங்கு ரவுண்டானா சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ரவுண்டானா விபத்தை தடுப்பதற்கு பதிலாக, விபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் ரோட்டில் பாதி இடத்தை மறைத்து ரவுண்டானா அமைத்துள்ளனர். இதனால் திண்டுக்கல்லில் இருந்து வரும் வாகனமும், தேனியில் இருந்து வீரபாண்டி கோயில் வழியாக செல்லும் வாகனங்கள் வலது புறம் திரும்ப காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் பின்னால் வரும் வாகனங்கள், வீரபாண்டி - முத்துத்தேவன்பட்டி ரோட்டை கடக்கும் வாகனங்கள் மீது மோதி விபத்திற்கு உள்ளாகும் அபாயமும் உள்ளது.ரவுண்டானாவை ஒட்டியுள்ள ரோட்டை நான்கு பகுதிகளிலும் அகலப்படுத்த வேண்டும் அல்லது ரவுண்டானா அளவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.