உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விபத்துக்களை தடுக்க  சாக்கடை தரைப்பாலம் அகலம் நீட்டிப்பு 

விபத்துக்களை தடுக்க  சாக்கடை தரைப்பாலம் அகலம் நீட்டிப்பு 

தேனி : தேனியில் மதுரை ரோட்டில் ரயில்வே மேம்பால பணி நடக்கும் பகுதியில் விபத்துக்களை தடுக்க சர்வீஸ் ரோடு நீட்டிக்கப்பட உள்ளது. இதற்காக அப்பகுதியில் 10 மீட்டர் துாரத்திற்கு சாக்கடை தரைப்பாலம் அமைக்கும் பணி துவங்கியது. தேனியில் மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுமார் ரூ.96 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. இப்பாலத்தில் தேனி நகர் பகுதி, மதுரை ரோடு, புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய 3 பகுதிகளில் இருந்து வாகனங்கள் மேலே செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் தேனி நகர் பகுதி, மதுரை ரோட்டில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன. ரயில்வே தண்டவாளங்களுக்கு மேல் பகுதியில் பொருந்துவதற்கான கார்டர் தயாரிக்கும் பணி, புது பஸ் ஸ்டாண்ட் ரோடு பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. தேனி நகர்பகுதியை இணைக்கும் பகுதியில் அரண்மனைப்புதுார் விலக்கு வரை இருபுறமும் சர்வீஸ் ரோடு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த சர்வீஸ் ரோடுகள் பாலம் துவங்கும் பகுதியில் இணைகின்றன. இந்த இடம் குறுகலாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் பாரஸ்ட் ரோட்டில் இருந்து வரும் சாக்கடை தரைப்பாலம் இருபுறமும் நீட்டிக்கும் பணி நேற்று துவங்கியது. இதுபற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சர்வீஸ் ரோடுகள் அமைக்க தற்போது உள்ள தரைப்பாலம் இருபுறமும் சுமார் 5 மீட்டர் நீட்டிக்கப்பட உள்ளது. தற்போது உள்ள அளவை விட அகலம் கூடுதலாக அமைக்க திட்டமிட்டு உள்ளோம். இருபுறமும் தரைப்பாலம் அமைத்த பின் தற்போது உள்ள தரைப்பாலம் அகற்றப்பட்டு, புதிதாக அமைக்கப்படும். இதனால் அப்பகுதியில் வாகன விபத்துகள் தவிர்க்கப்படும்.'', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ