காய்ச்சலுக்கு மாணவன் பலி 6 சிறுவர் - சிறுமியர் அட்மிட்
தேவதானப்பட்டி:தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், குள்ளப்புரம் ஊராட்சி, சங்கரமூர்த்திபட்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மோகித்குமார், 10; தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தார்.அக்., 14ல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மோகித்குமார், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி, 14, கிரித்திக், 10, ஆகிய இருவர் டெங்கு காய்ச்சலாலும்; பூமிஜா, 6, ஹரீஷ், 17, ஆகியோர் வைரஸ் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு, தேனி மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷ்வந்த், 7, ஜோதிபிரபா, 9, ஆகியோர் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம், சாக்கடை, குப்பை அகற்றாதது உள்ளிட்ட சுகாதாரமற்ற சூழலே நோய் தொற்று பரவ காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.தேவதானப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் கோமதி கூறுகையில், ''மோகித்குமார் வைரஸ் காய்ச்சலால் இறந்துள்ளார். அப்பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.