| ADDED : டிச 27, 2025 05:52 AM
மூணாறு: மூணாறில் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்தது. மூணாறைச் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களில் தமிழர்கள் பல தலைமுறைகள் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தும் வினோதம் தொடர்ந்து வருகிறது. அதனை ஆங்கிலேயர் காலம் முதல் ஒரு நூற்றாண்டுக்கு மேல் தவறாமல் கடை பிடித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து மேளம், கரகாட்டம், ஆடல், பாடல் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் கொண்டு வரப்பட்டு திருவிழாக்கள் சிறப்புடன் நடத்தப்படும். அதுபோன்று உற்சாகத்துடன் கோயில்களில் திருவிழாக்கள் நேற்று முதல் துவங்கின. உயர்வு: மூணாறில் தமிழகம் போடி, நிலக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அப்பகுதிகளில் இருந்து பூக்களை கொண்டு வந்து விற்பனை நடத்தி வருகின்றனர். பண்டிகை, திருவிழா காலங்களில் தற்காலிக கடைகள் ஏராளம் முளைக்கும். தற்போது கோயில் திருவிழாக்களை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்ததால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்தனர். பூக்கள் விலை (ஒரு முழம் அளவில்) மெட்ராஸ் மல்லி,முல்லை, பிச்சி ஆகிய பூக்கள் ரூ.80. கதம்பம் ரூ.20 என விற்கப்பட்டது. சாதாரண நாளில் கதம்பம் ரூ.10க்கும், பிற பூக்கள் அன்றாட விலைக்கு ஏற்ப ரூ.50 க்குள் விற்கப்பட்டது.